எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம். கொரிய திரைப்படங்கள் கொரிய திரைப்படமாக இருப்பதால் அதனை உலகதிரைப்படம் என்று கூறுகிறார்கள். ஜப்பானிய திரைப்படம் ஜப்பானிய திரைப்படமாக இருப்பதால் அதனை உலகதிரைப்படம் என்று கூறுகிறார்கள், ஈரானிய திரைப்படம் ஈரானிய திரைப்படமாக இருப்பதால் அதனை உலகதிரைப்படம் என்று கூறுகிறார்கள். .... ஆனால் தமிழ் படம் மட்டும் ஏன் தமிழ் படமாக இல்லாவிட்டால் உலக திரைப்படம் என்று கூறுகிறார்கள்??
நிற்க!!!
சிறுவயதில் நான் கமலின் ரசிகன் கிடையாது. ஒரு முறை தியேட்டரில் குருதிப்புனல் படம் (முதல் முறையாக கமல் படம்..அதற்க்கு முன் வரை, ஆடி வெள்ளி, துர்கா, கரகாட்டக்காரன் போன்ற குடும்ப படங்கள் மட்டும்தான்.) பார்த்தேன். அதிலிருந்து அவரின் தீவிர ரசிகனாகவே இருந்தேன். விருமாண்டி வரை. இன்றும் நான் கமலின் நடிப்புக்கு ரசிகன்தான்.
விஸ்வரூபத்தில் கமல் எதற்க்காக ஆப்கான் தீவிரவாதிகள், அமெரிக்காவை அழிக்கும் திட்டத்தை ஒழிக்கும் இந்திய அதிகாரியாக நடித்தார் என்பது எனக்கு எவ்வளவு யோசித்தாலும் புரியவில்லை. ஒருவேளை உலகதிரைபடம் என்றால் அப்படிதான் இருக்குமோ??
ஒரு படைப்பாளியாக கமல் மீண்டும் தோல்வி அடைந்திருக்கும் படம் விஸ்வரூபம். இனிமேலும் அவர் வெற்றி அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால்...!
கமலுக்கும் சிவாஜிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பற்றி பேசிகொண்டிருக்கும்போது..எப்போதுமே நான் ஒன்று கூறுவது வழக்கம்! சிவாஜியின் எத்தனை படங்களை வேண்டுமானால் பாருங்கள்..பார்த்து விட்டு சிவாஜி உண்மையில் நாத்திகனா, கம்யூனிஸ்ட்-ஆ, தமிழுணர்வு உள்ளவரா இல்லையா, எதையுமே உங்களால் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் எல்லாம் இன்னொரு படைப்பாளி படைத்த பாத்திரங்கள். இவர் நடிகர் என்ற வேலையை மட்டுமே பார்த்தார். ஆனால் கமலின் எந்த சமீபத்திய படங்களை பார்த்தாலும் கமலின் உண்மை நிலை/எண்ணம் என்ன என்பதை யாரும் சொல்லிவிடலாம். நாத்திகன், கம்யூனிஸ்ட், தமிழ் பற்று..எல்லாம்! இது எனக்கு கமலின் தோல்வியாகவே படுகிறது. இழப்பு அவருக்கு மட்டும் அல்ல, ஒரு மிகச்சிறந்த நடிகரை ஒரு சார்பு (monotonic) வேடம் மட்டும் அணிந்து நடிப்பதால் தமிழ் சினிமாவிற்கும் தான்.
கொஞ்சம் யோசித்து பாருங்களேன்! மும்பையில், தவறான தொழில் செய்யும் தாய்க்கு பிறந்த, மனநிலை தவறிய ஒருவன் அபிராமி அந்தாதி பாடிக்கொண்டு திரிவதன் காரணம் என்ன? அது கமலின் விருப்பம். அந்த பாத்திரத்திற்கு அது தேவையா, பொருந்துமா என்பதை எல்லாம் அவர் யோசிப்பதே இல்லை. ஒரு சின்ன வசனம் வைத்துவிட்டு அவருக்கு பிடித்ததை எந்த பாத்திரமும் செய்யும்படி மாற்றுவது, என்னை பொறுத்தவரை அவரின் திறமையை வேண்டுமானால் காட்டலாம், ஆனால் ஒட்டுமொத்த படமாக பார்கையில் அந்த விஷயம் துருத்தி கொண்டேதான் இருக்கும்.
சிங்கப்பூரில் வேலை பார்த்து ஊர் திரும்பிய ஒரு சண்டியர் நேதாஜி பற்றியும் உயர்வாகவும் , கிரிக்கெட் பைத்தியமாக இருக்கும் மனிதர்களையும் கிண்டல் செய்வதின் மூலம் நான் திரையில் பார்த்தது விருமாண்டியை அல்ல. கமலைதான். அதுதான் அவரின் பலவீனம்.
மறுபடியும் நிற்க!!!
முன்னுரை போதும் என்று நினைக்கிறேன், விஸ்வரூபம் படத்திற்கு வருவோம். சிங்கப்பூரில் சிறுவர்/சிறுமியரை அனுமதிக்கவில்லை. ஆகவே மனைவியையும், பாரதியையும் வீட்டில் விட்டு படத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை. அவர்களின் சாபம்தான் படம் அப்படி இருந்ததற்கு காரணமோ என்று சந்தேகமாக இருக்கிறது J.
படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் பொக்கிஷம், கமல் ரசிகர்களுக்கு. அந்த நடனமும், பெண்மையின் நளினம் கூடிய பேசும் பாவனையும்..அற்புதம்! (‘வரலா(ற்)று’ உணர்வு ‘தலை’க்குள் உள்ளவர்கள் குறைந்த பட்சம் அந்த பாட்டை மட்டுமாவது பாருங்கள். ஒற்றை நடன அசைவை --அதுவும் என்ன முத்திரையோ?-- ஐந்து காமராவில் படம் பிடித்து அதை சுற்றி சுற்றி முழுப்பாட்டுக்கும் காட்டும் பிழைப்பை கமல் செய்யவில்லை. அட டான்ஸ் வேண்டாம் அது (மட்டும்தான்) இன்னொருத்தருக்கு வரும்..குறைந்தபட்சம் நடிப்பு..?. (கெட்ட வார்தையோ?) ..அட ஒரு அசைவு..? என்னமோ போங்கப்பா!!)
அமெரிக்காவில் வசிக்கும் நடன ஆசிரியர் கமல்.ஆண்ட்ரியா அவரிடம் நடனம் கற்று கொள்கிறார். கமலின் மனைவி, கமலை பிடிக்காமல் இன்னொருவரை நேசிக்கிறார். விவாகரத்திற்கு காரணம் வேண்டும் அல்லவா? ஆகையால் கமலை பின்தொடர்ந்து அவருக்கு ஏதாவது தொடர்பு இருந்தால் அதை வைத்து விவாகரத்து செய்யலாம் என்று ஒரு அப்புராணியை அனுப்புகிறார். அந்த அப்புராணி கமலை பின்தொடர்ந்து, பின்தொடர்ந்து தவறுதலாக தீவிரவாதிகளின் ரகசிய இடத்திற்கு சென்று விடுகிறார் (இதுதான் ரொம்ப முக்கியமான கட்டம்..அவர் அங்கு தவறுதலாக செல்ல வில்லை என்றால், கமல் நடனம் கற்றுக்கொடுத்து மட்டுமே இருந்திருப்பார்! நாமும் சலங்கைஒலி போன்ற ஒரு அனுபவத்தை பெற்று இருக்கலாம்..என்ன செய்வது?..பிரியா, மற்றும் பாரதியின் சாபம் சும்மா விடுமா?..)
தீவிரவாதிகள் அவரை கொன்று, கமலையும் அவர் மனைவியையும் கடத்தி கொண்டு வருகிறார்கள் (எதுக்கா?..கமல் பேரை தெரிஞ்சிக்கத்தான்)..! கமலும் ஒரு மூன்று நான்கு பெயர் சொல்கிறார்! எதுவுமே அவர்களுக்கு பிடிக்கவில்லை! திடீரென்று கமல் ஆக்ரோஷமாகி, அங்கு இருந்த அனைத்து (அய் அஸ்க்கு புஸ்க்கு படத்தை பத்து நிமிஷத்தில முடிச்சிரலாம்னு பார்கிறீங்களா?) ..தரைதளத்தில் இருந்த அனைத்து வில்லன்களையும் அடித்து துவம்சம் செய்து தப்பிக்கிறார். (எதுக்கு தப்பிக்கிறார்..மீதி இருப்பவர்களையும் சும்மா கும்தலக்கடினு குத்தலாம் இல்ல?...அட போங்க பாஸ்..அவரு இன்னொரு பார்ட் வேற எடுத்து வச்சிருக்காரு..நீங்க படத்தை சீக்கிரம் முடிகிறதில மட்டும் அக்கறை காட்டுங்க!)
அப்போதுதான் ஒரு உண்மை எல்லோருக்கும் தெரிகிறது! கமல் ஒரு இந்திய உளவு துறை அதிகாரி, அவர் அமெரிக்காவை நாசம் செய்ய முயற்சி செய்யும் ஆப்கான் தீவிரவாதிகளை அழிக்க நடன ஆசிரியராக அமெரிக்காவில் நடமாடி கொண்டு இருக்கிறார் (எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...! இந்தியாவில சம்பளம் வாங்கிற ஒருத்தர் அமெரிக்காவை எதுக்கு காப்பத்தனும்?. ஒரு வேலை ரெண்டாவது பார்ட்டில் அதுக்கு பதில் இருக்குமோ?).
தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக கமலும் அவரின் உயரதிகாரியும் (அந்த நிமிஷம் வரை அவர் கமலின் மாமா) அவசரமாக வீட்டை காலி செய்து கொண்டு கிளம்ப பார்கிறார்கள்! அந்த நேரம் பார்த்தால் கமலின் மனைவி அந்த அவசரத்திலும் துணிமணியை எடுத்து வைத்து கொண்டு இருக்கிறார்! அதை பார்த்து அந்த மாமா அலைஸ் உயரதிகாரி சீக்கிரம் கிளம்பு இதற்க்கெல்லாம் நேரம் இல்லை என்று கூறுகிறார். தியேட்டரில் எல்லோரும் சிரித்தார்கள் (அய்யோ..அய்யோ..அப்படி ஒரு அப்பாவி பொண்ணா?..)
அடுத்த நிமிடத்தில் கமல் மாடியில் இருந்து முடியை ஓட்ட வெட்டிக்கொண்டு வீறுநடை (ஸ்லோ மோஷன்) போட்டு படியில் இறங்கி வருகிறார்!.(அட இந்த முடிவெட்ட மட்டும் எப்படி நேரம் இருந்தது?..ஆனா என்னைத்தவிர ஒரு பய தியேட்டரில் சிரிக்கவில்லை.ஆணாதிக்கம் ஒழிக!!! )
அந்த நேரத்தில் ஒரு பிளாஷ்பேக்..! கமல் ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கிறார். மிக தீவிரமாகவே பயிற்சி கொடுக்கிறார் (எதுக்கா?..அப்பதான அவுங்கள கிளைமாக்ஸ்-ல அழிக்க முடியும்..) அப்புறம் ஒரு காட்சியில் அவர் இந்தியாவின் ஒற்றன் என்பதை ரகசியமாக அங்கு இருந்த கமலின் உதவியாளர் மூலம் நமக்கு உணர்த்துகிறார். அந்த உதவியாளரும் ரா தான் போல..அப்போ அவரும் ஹீரோ தானே?...மூச்..கமல் படத்தில இன்னொரு ஹீரோவா?.பாவம் ரெண்டு சீன் மூணு டயலாக் பேசிட்டு காணாம போயிடுறாரு!,
அதை விட உச்சகட்டமா..அந்த முகாமில் ஒசாமா பின் லேடனை கமல் பார்பார்.. (லேடன் தெரியுமா? பின்.. லேடன்!!!). இதையெல்லாம் விஜயகாந்த் பண்ணி இருந்தா...கொள்ளை பயக சிரிச்சிருப்பாங்க!..கமல் ஆச்சே..உலக நாயகன் ஆச்சே..அவர் ரெண்டு படத்துக்கு முன்னாடி புஷ் கூடவே சாரி புஷ்ஷாவே நடிச்சாரே..ஒசாமா புஷ்ஷை விட பெரிய ஆளா என்ன?..!
சரி அப்புறம் எப்போதான் அமெரிக்கா போனாரு?..(அவன் அவனுக்கு விசா கிடைக்கிறதுக்கு உள்ள நாக்கு வெளிய தள்ளிருது! இவரு எங்க நினைச்சாலும் போறாருபா!..)
அங்கதான் ட்விஸ்ட்! அவரு ஆப்கானில் தீவிரவாதிகள் கூட இருந்தது அவுங்களுக்கு சொல்லி கொடுக்க இல்லையாம்..அவுங்க என்ன பண்றாங்க அப்படின்னு தெரிஞ்சிட்டு அமெரிக்காவை காப்பத்துவதுக்காம்!(இதோ பார்ரா!!)
தீவிரவாதிகள் புறா காலில் அணு கதிர்வீச்சை உமிழும் ஒரு பொருளை கட்டிவிட்டு அமெரிகாவினுள் அனுப்புகிறார்கள்.! ஆகவே அனைத்து சென்சார்களும் செயலிழக்கின்றன! அந்த நேரத்தில் ஒரு அணுகுண்டை செல்போன் மூலம் வில்லன் வெடிக்க வைக்க பார்க்கிறார். வழக்கமான பழைய படமாக இருந்தால் ஏதாவது ஒரு வயரை பிடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஹீரோ வயரை கட் செய்வார்..பாம் செயல் இழக்கும். ஆனால் நம்ம உலக நாயகன்தான் வழக்கமான ஆள் கிடையாதே! வானத்தை பார்க்கிறார்! அதுவரைக்கும் அமைதியா இருந்த அவர் மனைவி, மைக்ரோவேவ் ஓவனை அந்த செல்போன் மீது கவிழ்த்து வைக்கிறார்! வில்லன் போன் செய்து பார்த்துவிட்டு, இந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்று பதில் வந்ததும்..விமானத்தில் பறந்து செல்கிறார். சுபம்!
படம் முழுவதும் ஆண்ட்ரியா இருந்தார். ஆனால் அவர் யார் என்று யாருமே சொல்லவில்லை (ஆண்ட்ரியாதான்...என்ற மொக்கை ஜோக்-எல்லாம் வேண்டாம்).
வீட்டிற்கு வந்தேன். படம் எப்படி இருந்தது என்றாள் ப்ரியா. “முதல் பத்து நிமிஷம் சூப்பரா இருந்துச்சி!”. என்றேன். “அந்த பத்து நிமிஷத்துக்கா பதினெட்டு டாலர்?”. என்றாள். அவசரமாக மறுத்தேன்.. “இல்ல இல்ல..பத்து நிமிஷம் சூப்பர். மீதியெல்லாம் சூப்பரோ சூப்பர்!”
இந்த ப்ளாக் அடிக்கடி என் மனைவி படிக்கமாட்டாள் என்ற நம்பிக்கையில்,
காளிராஜ்!