வகைப்படுத்த முடியாதவை!

காதும் வலியும்!
பாரதி நீண்ட நாட்களாக கதை சொல்லும்படி என்னை நச்சரித்து கொண்டிருந்தாள். நானும் அதை ஒத்தி போட்டு கொண்டே வந்தேன்.
ஒரு நாள் ஞானோதயம் ஏற்பட்டு, கதை சொல்ல ஆரம்பித்தேன். பாரதிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. "இருப்பா! பாத்ரூம் போயிட்டு வரேன்." என்றவள் கை, கால், முகம் அலம்பிவிட்டு வந்தாள். நான் ஆரம்பித்தேன்.
"ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுகிட்டு இருந்தாங்களாம். அங்க பக்கத்தில ஒரு மரத்தில ஒரு காக்காவும் இருந்துச்சாம்".
"காக்கான்னா க்ரோவ் தானப்பா?" என்றாள்.
நான் க்ரோவ் என்றால் காக்கா என்றுதான் படித்ததாக நினைவு. சிரித்துக்கொண்டே ஆமோதித்தேன்."பாப்பா கதை சொல்லும்போது நடுவுல கேள்வி கேட்கக்கூடாது" சிறு வயதில் இருந்தே எனக்கு இருந்த கேள்வி பயத்தை வெளிப்படுத்தினேன். பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்தேன்.
"ஒரு நாள் அந்த வடையை காக்கா தூக்கிட்டு போயிடிச்சாம்"
"காக்கா தலை மேல வச்சி தூக்கிட்டு போய்ச்சப்பா?" எனக்கு தலை சுற்றியது. ஆனாலும் தொடர்ந்தேன்.
"அப்போ ஒரு நரி வந்திச்சாம். வந்து காக்கா காக்கா நீ அழகா இருக்கே ஒரு பாட்டு பாடேன் அப்படின்னு சொல்லிச்சாம்".
"சூப்பர் சிங்கர்ல வர்ற மாதிரி பாட சொல்லிச்சா?"
"ஆமா. காக்கா கா...கா..ன்னு கத்திச்சா..வடை கீழ விழுந்திச்சாம். நரி தூக்கிட்டு ஓடிடிச்சாம்".
"ம்ம்.. அப்புறம்?"
எனக்கு ஒரு வேளை கதை சொல்ல தெரியவில்லையோ?. "அவ்வளவுதான் பாப்பா" என்றேன் அவநம்பிக்கையோடு.
"ஓ..தூக்கிட்டு ஓடி போய் வடையை சாப்பிடுச்சா?.."
"ஆமாம்".
"சரி ஓகே. இது ரொம்ப குட்டி கதையா இருக்கே. இன்னொரு கதை சொல்லு".

இந்த முறை எப்படியும் நன்றாக சொல்லிவிடவேண்டும் என்ற ஆசையில் இன்னொரு கதையை ஆரம்பித்தேன்.
"ஒரு ஊர்ல இருந்த மரத்தில ஒரு காக்கா இருந்திச்சாம்."
"வடையை தூக்கிட்டு போச்சே..அதே காக்காவா? இல்ல வேற காக்காவா?"
எனக்கு கண்ணைக்கட்டி கொண்டு வந்தது.
"அதை பத்தி உனக்கு என்ன கவலை? கதையை ஒழுங்கா கேளு" சொல்லிவிட்டு தொடர்ந்தேன்.
"அந்த மரத்துக்கு கீழ ஒரு பாம்பு புத்து இருந்திச்சாம்".
"புத்து-னா?"
"புத்து-னா பாம்போட வீடு".
"ஓ..நம்ம வீடுமாதிரி அது பாம்பு வீடு"
"ஆமா. அந்த பாம்பு கெட்ட பாம்பாம். டெய்லி மரத்து மேல ஏறி காக்காவோட முட்டைய ஓடைச்சு குடிச்சிடுமாம்".
"மரத்து மேல இருந்து கீழ சிந்தாம குடிச்சிடுமா?"
அப்படி குடிக்க முடியுமா என்ற கேள்வியே எனக்கு அன்றைக்குத்தான் தோன்றியது.
"ஆமா பாப்பா. கதை சொல்லும்போது டிஸ்டர்ப் பண்ணாதே"
"சரி சொல்லு"
"அந்த காக்கா ஒரு நாள் ஒரு பிளான் பண்ணிச்சாம். நேரா போய், ராணி குளிச்சிட்டு இருக்கும்போது அவுங்க நகையெல்லாம் தூக்கிட்டு பறந்திச்சாம்"
"அய்யய்யோ அப்புறம்?"
அவளுக்கு இந்த ஒரு வாக்கியம் புரிந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்!
"எல்லாரும் தொரத்திகிட்டே ஒடுனாங்கலாம். காக்கா அந்த நகையை எல்லாம் நேரா கொண்டு போய் அந்த பாம்பு புத்துல போட்டுடிச்சாம்"
"பாம்பு வீட்டு ஓட்டு மேலயா?"
பாம்பு வீட்டுக்கு..ச்சேய்..பாம்பு புத்துக்கு ஏது ஓடு?. நினைத்து கொண்டு தொடர்ந்தேன்.
"இல்ல பாப்பா. புத்துக்கு உள்ள போட்டுச்சாம்.ஓடி வந்த எல்லாரும் அந்த புத்த இடிக்க ஆரம்பிச்சாங்கலாம். அப்போ அந்த பாம்பு 'யாருடா ஏன் வீட்டை இடிக்கிறது' அப்படின்னு வெளிய வந்திச்சாம். உடனே எல்லாரும் அதை அடிச்சே கொன்னுட்டாங்களாம். அப்புறம் அந்த காக்கா சந்தோசமா இருந்துச்சாம்.
அவ்வளவுதான்" நானே முடித்து விட்டதாக கூறினேன்.
அவளுக்கு ஒரு அளவிற்கு திருப்திதான் என்று தோன்றியது. ஆனான் எனக்குத்தான் ஒரு ப்ராஜெக்ட் முடித்த அலுப்பு வந்தது. இன்னொரு கதை கேட்டு விடக்கூடாது என்று நினைத்து கொண்டிருக்கும்போதே...
"சரிப்பா. இப்ப நான் ஒரு கதை சொல்றேன்"
இது நல்லா இருக்கே! கேட்பதினால் காது ஒரு போதும் வலிப்பதில்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
"சரி சொல்லு!" என்றேன்.

" ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தாங்களாம்.அங்க ஒரு காக்கா இருந்திச்சாம்."
எனக்கு புரிந்து விட்டது. அவள் என்னை அவளின் மனப்பாட சக்தியை சோதித்துப்பார்க்க சோதனை கூடமாக ஆக்குகிறாள். சுதாரித்து கொண்டு அவளை மடக்குவாதாக நினைத்து கொண்டு...
"காக்கான்னா க்ரோவ் தானே?" என்றேன்.
"இல்லப்பா. ப்ளாக் காக்காதான் க்ரோவ். இது வொயிட் காக்கா"
சின்ன வயதில், வெள்ளை காக்கா பறக்குது பார் என்று என்னை மேலே பார்க்க விட்டு என் நண்பன் கிள்ளியது ஞாபகம் வந்தது.
"ஓ.. சரி சொல்லு"
"அந்த காக்கா ஒரு நாள் அந்த வடையை தூக்கிட்டு பறந்து போச்சாம். போய் ஒரு மரத்து மேல உக்காந்துகிச்சாம். அப்ப ஒரு நரி வந்திச்சாம்"
இந்த முறை எப்படியும் அவளை மடக்கி விடும் எண்ணத்தில்...
"நரி எங்க இருந்து வந்திச்சு?" என்றேன். சிறிது நேரம் யோசித்து விட்டு சொன்னாள்..
"ம்ம்..அந்த மரத்து கீழ ஒரு பாம்பு புத்து இருந்துச்சுல்ல..அதுக்கு பின்னாடி இருந்து வந்திச்சாம்"
அதோடு அவள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். நான் வாயை மூடிக்கொண்டிருந்தேன்.
"வந்து காக்கா காக்கா நீ அழகா இருக்க ஒரு பாட்டு பாடேன். அப்படின்னு சொல்லிச்சாம். காக்கா..போய் குளிச்சிக்கிட்டு இருந்த ஒரு ராணியோட கோல்ட் செயினை தூக்கிட்டு வந்திச்சாம். எல்லாரும் துரத்துனாங்க. ஆனா இது பாஸ்ட்-ஆ பறந்திச்சாம். நேரா போய் அந்த பாம்பு புத்துக்குள்ள அந்த செயினை போட்டுச்சாம். ஓடி வந்தவங்க எல்லாரும், அங்க இருந்த நரியை கொன்னுட்டு, புத்த ஓபன் பண்ணு நகையை எடுத்துக்கிட்டு டோரை  க்ளோஸ் பண்ணிட்டாங்களாம். அதுக்கு அப்புறம் அந்த காக்கா ஹாப்பியாய் வடை சாப்பிட்டிச்சாம். அவ்வளவுதான்"

எனக்கு காதும் வலிக்க ஆரம்பித்தது!!

4 comments:

  1. 'வடை’ நல்லா இருந்தது, ச்சீ கதை நல்ல இருந்தது. :)

    ReplyDelete
  2. சிறு வயதில் இருந்தே எனக்கு இருந்த கேள்வி பயத்தை வெளிப்படுத்தினேன்.
    ha ha nice
    maha

    ReplyDelete
  3. Nandra aga irunthathu....


    Shanmugam

    ReplyDelete
  4. காக்கான்னா க்ரோவ் தானே?" என்றேன்.
    "இல்லப்பா. ப்ளாக் காக்காதான் க்ரோவ். இது வொயிட் காக்கா" ------ Nice thinking

    Rameshraja

    ReplyDelete

உங்கள் கருத்துக்களுக்கு!!