என்ன எழுத வேண்டும் என்பதை விட, ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விதான் என்னை நீண்ட நாட்களாக துளைத்து கொண்டிருந்தது. நான் எழுதுவதை பற்றி மட்டும் அல்ல..யார் எழுத்தை படித்தாலும் இதே கேள்விதான்..என்ன நோக்கத்திற்காக..இவர்கள் எழுதுகிறார்கள்?. இதை எழுதுவதால் இவர்களுக்கு கிடைப்பது என்ன?.. பணம்?. எனக்கு தெரிந்த வரை பெரும்பாலான எழுத்தாளர்கள் ஜீவனத்திற்கு வேறு வேலை பார்த்துக்கொண்டுதான் எழுதி கொண்டிருக்கிறார்கள். ஆக எழுத்து பணம் பெற மட்டும் உதவுவதில்லை! வேறு ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். புகழ்?.. ஒரு தனிக்கூட்டமே கவனிப்பாரற்று எழுதி கொண்டே இருக்கிறது இந்த உலகத்தில். இணையத்தில் இது இன்னும் அதிகம். மிஞ்சி போனால் பத்து நண்பர்கள் படிப்பதற்காக எழுதுபவர்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன் (நானும் அதில் ஒரு உருப்படிதான் :) ).
இவர்கள் அனைவரும் எதற்காக எழுதுகிறார்கள்?..சுற்றி சுற்றி இந்த கேள்விகளே அந்த வாரம் முழுதும் என்னை ஆக்கிரமித்திருந்தது. அந்த நாள் வரும் வரை...
பாரதி (என் ஆறு வயது மகள்) வெயிலில் விளையாடி கொண்டிருந்தாள். நான் மாடியில் இருந்து பார்த்து கொண்டிருந்தேன். குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பது கூட ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கும். காரணமே இல்லமால் நிறைய விளையாட்டுக்கள் உண்டு அவர்களிடம்.
அன்றும் அப்படித்தான். ஒரு புறத்தில் இருக்கும் மணலை அள்ளி பின் பக்கமாகவே நடந்துவந்து கீழே கொட்டுவதுதான் அன்றைய முக்கிய அலுவல் அவளுக்கு. சலிக்கவே இல்லை அவளுக்கு. முழுதாக ஒரு மணி நேரம் விளையாடி கொண்டே இருந்தாள்.
கடைசியாக பின் புறமாக நடக்கும்போது ஒரு கல் தடுக்கி கீழே விழுந்தாள். நான் பதறி எழுந்து செல்ல எத்தனித்தேன். நல்ல அடி விழுந்திருக்கும் அவள் காலில். ஆனால் அவள் உடனே எழுந்து நின்றாள். நிதானித்தேன். அவளை இன்னும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
எழுந்து சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தாள். வீட்டுக்குள் ஓடி வந்தாள். நேராக என்னிடம், வேகவேகமாக படி ஏறி ஓடி வந்தாள். என்னை பார்த்ததும் அழ ஆரம்பித்தாள். "கீழே விழுந்துட்டேன்".. அவளை சமாதானபடுத்தினேன்.
எண்ணங்கள் சுழல ஆரம்பித்தது. அவளுக்கு உண்மையில் வலி இருந்திருந்தால், விழுந்தவுடன் அல்லவா அழுதிருக்க வேண்டும்?. ஏன் என்னை பார்க்க ஓடி வரவேண்டும்?. மெதுவாக புரிந்து கொண்டேன். வருத்தத்தையும் வலியையும் பகிர்ந்து கொள்வதற்காகவே என்னை தேடி இருக்கிறாள்.
பகிர்ந்து கொள்வதால் அவளுக்கு வலி குறையுமா? அதற்கு கிஞ்சித்தும் வாய்ப்பு இல்லை. ஆனாலும் பகிர்தல் அவளுக்கு ஒரு சிறு மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்க வேண்டும் அல்லது வலியை மறக்கடித்திருக்க வேண்டும், ஒரு சிறு அளவாவது.
வருத்தம், சோகம் இவை மட்டும்தான் பகிரப்படுகிறதா? மகிழ்ச்சியும்தான் இல்லையா? பிறந்த நாள் கொண்டாட்டங்களும், திருமண கொண்டாட்டங்களும், பகிர்வதற்காக உண்டானவை தானே?.
வருத்தம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் மட்டும்தான் பகிரப்படுகிறதா?. டீக்கடையில் பேசும் அரசியலில் சமூக பார்வைகளும், மாணவர்களின் பேச்சில் அவர்களின் ஆசிரியரின் வர்ணனையும், காதலர்களிடையே அவர்கள் காதல் பற்றி கற்பனை கலந்த பார்வைகளும்.. எல்லாமே ஒரு வகை பகிர்தல்தானே?. யோசிக்கும்போது..ஒரு உண்மை புலப்படுகிறது. மனித மனம் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறது, நண்பனிடம், சுற்றத்தாரிடம், ஒரு சில நேரங்களில் முன்பின் தெரியாதவரிடம் கூட (என்ன கண்டக்டர் அண்ணே! டி.எம்.கே ஜெயிச்சிடும் போல?).இன்னும் சொல்லப்போனால், நாம் எல்லாவற்றையும் யாரிடமாவது பகிர்ந்து கொண்டே இருக்கிறோம். சிலவற்றை பலரிடமும், பலவற்றை சிலரிடமும்..பகிர்தல் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கிறது.
எல்லா விசயங்களும் பகிரப்படுகிறதா என்று யோசிக்கும்போது..எனக்கு முதலில் இல்லை என்று தோன்றியது அவரவர் மனைவிடனும்/கணவனுடனுமான அந்தரங்கம் மட்டும்தான். இந்த எழுத்தை உள்ளீடு செய்யும்போதுதான் அதுவும்இல்லை என்று புரிகிறது. அந்த அந்தரங்கமே மனைவி கணவனிடமும், கணவன் மனைவியிடனும் செய்யும் பகிர்தல்தான் இல்லையா?.
இந்த பகிர்தலினால் கிடைப்பது என்ன?. டார்வினின் பரிணாம கொள்கைப்படி "பகிர்தல் மகிழ்ச்சி கொடுக்கவில்லை என்றால்..அந்த பழக்கமே நம்மை விட்டு சென்றிருக்கும்". ஆக பகிர்தல் நிச்சயம் மகிழ்ச்சியை கொடுத்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும், காலகாலமாக.
காரணம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்..இதோ எழுத ஆரம்பித்து விட்டேன்! யாருக்காகவும், வேறு எந்த காரணத்திற்காகவும் எழுதவில்லை, பகிர்தல் எனக்கு இன்பம் கொடுக்கும் என்ற ஒரு காரணத்தை தவிர!. படிப்பவர்களுக்கு இன்பம் அளித்தால் எனக்கு மேலும் மகிழ்ச்சி..
ஆனால் நான் யாரையும் காயப்படுத்தவோ, மகிழ்ச்சிப்படுத்தவோ எழுதவில்லை. படிப்பதில் உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ இல்லையோ, எனக்கு இன்பம் நிச்சயம். ஆகவே ஆரம்பித்து விட்டேன், முழுக்க முழுக்க சுய நலத்திற்காக!
ஆம்! பகிர்தலும் (பகிர்பவர்க்கு) இன்பம் பயக்கும்!!!!!!
-- காளிராஜ்
வணக்கம் காளி, நல்லா இருக்கீங்களா? இணைய உலகிற்கு நல்வரவு.
ReplyDeleteதொட்ர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.
மிக்க நலம். நன்றி பாலா.
ReplyDeleteஉங்க தலைப்பு ரொம்ப நல்லா இருக்குதுங்க!!!
ReplyDeleteஉங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
மகாலட்சுமி
வாழ்த்துக்களுக்கு நன்றி மகாலட்சுமி!
ReplyDelete