சிறுகதைகள்!!! சிறியதாக இருப்பதால் மட்டும் அல்ல! அந்த துறையில் சிறுவனாக இருப்பதாலும்தான்!!!

ஞானம்!!

குடி குடியை கெடுக்கும்!!. உண்மைதான். நான் கொஞ்சம் தெளிவாக இல்லையென்றால்அதுநடந்திருக்கும்.முதல் ரவுண்டு முடிக்கும்போதே மனைவியிடம் இருந்து செல்பேசி அழைப்பு. வீட்டில் சர்க்கரை இல்லையாம்.நான்வரும்போது வாங்கி வர வேண்டுமாம்.  நான் தெளிவாக இருந்ததால் முக்கியமான வேலை இருப்பதாகவும் இரவு வீட்டுக்கு வர முடியாது என்பதையும் கெஞ்சி, கொஞ்சி சொல்லி முடித்தேன். நல்ல வேலையாக நான் முதல் சுற்றில் இருந்ததினால் இது நடந்தது. ஒரு முறை இப்படித்தான், ஆறாவது ரவுண்டு முடிக்கும்போது, வந்த அழைப்பில் அவளுக்கு தலை வலிப்பதாகவும் வரும்போது மாத்திரை வாங்கி வருமாறும் கூறினாள். நான் அரைகுறையாக விட்டு விட்டு, மெடிக்கல் ஷாப் சென்று ஒரு அனாசின் வாங்கி  வாயில்  போட்டு கொண்டு வீட்டுக்கு சென்று அவள் பாராட்டை எதிர்பார்த்து நின்றேன். நன்றாக கிடைத்தது.

அந்த அனுபவத்திலும், இன்று ஆரம்ப நிலையில் இருந்ததாலும், என் குடியை கெடுக்க வந்த குடி தோற்று ஓடியது. ஜெயித்த மகிழ்ச்சியில் தொடர்ந்தேன். எதிரில் வந்து இருவர் அமர்ந்தனர். இந்த பார் பற்றி என் ஆபீஸ்-ல் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க சொன்னார்கள். ஒரு முறை மணி இங்கு வந்து ஒரு தகராறு ஏற்பட்டு, இரண்டு நாள் ஆஸ்பிட்டலில் இருந்தான். எனக்கு பயம் ஆரம்பித்தது. இருந்தாலும் காட்டி கொள்ளாமல், கடமையில் கருத்தாக இருந்தேன். அவர்கள் பேசியதன் மூலம் நான் அறிந்தது, ஒருவன் பெயர் முகிலன் மற்றும் மற்றொருவன் ரத்தினம். அவர்கள் முதல் இரண்டு சுற்றுக்கள் பாசமாகதான் பேசிகொண்டார்கள்.  அதற்கப்புறம்தான் அவர்கள் ஆரம்பித்தார்கள். என்னையும் அறியாமல் (உள்ளே சென்ற திரவத்தின் காரணமாக கூட இருக்கலாம்) அவர்கள் பேச்சை கவனிக்க ஆரம்பித்தேன். என் ஊழி வினையும் செயல் புரிய ஆரம்பித்தது. அந்த விஷயத்தை முதலில் முகிலன்தான் ஆரம்பித்தான். "சொல்லுடா, கலர் டிவி கொடுத்தால் எப்படி பொது அறிவு வளரும்?". எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்ன கேள்வி இது?. அதை கழட்டி பார்த்தால், ஒருவேளை         எலக்ட்ரானிக்ஸ்  அறிவு வளர்ந்தாலும் வளரலாம். பொது அறிவு எப்படி?.... யோசித்து கொண்டு இருக்கும்போதே, ரத்தினம் பதில் சொல்ல ஆரம்பித்தான். "ம்ம்.. டிவி யில் செய்தி பார்க்கும்போது வளரும்ல?". மறுபடி எனக்கு குழப்பம் வந்தது, எந்த செய்தி பார்த்தால் பொது அறிவு வரும்? எனக்கு பார்க்க பார்க்க, பேசாம அரசியல்வாதி ஆகி இருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாம் என்று வயித்தெரிச்சல்தான் வளரும். இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல்,அவர்களை பார்த்து கொண்டிருந்தேன்.எனக்கு பொதுவாகவே பேச்சு குறைவு. அதுவும், இந்த மாதிரி நேரத்தில், சிந்தனை பெருக்கெடுத்து ஓடுமே தவிர பேச்சு வராது. வந்தாலும் யாருக்கும் புரியாது.

"கிழிக்கும். செய்தி கேட்குறதுக்கு கலர் டிவி எதுக்கு? அதுக்கு ரேடியோ போதுமே?". முகிலன் கோபப்படுவது அவன் பேசும் தொனியில் தெரிந்தது.  நான் அவனை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். ரத்தினத்துக்கும் கோபம் வந்தது. "நாடு இருக்கிற நிலைமையில் ஒரு கலர் டிவி கொடுப்பது எவ்வளவு உதவி தெரியுமா? சாதி கலவரம் குறையுது. மக்கள் எல்லாரும் ஆறு ஏழு மணிக்கெல்லாம் வீட்டில் அடங்குவதால் வெட்டி பேச்சும் வீண் சண்டையும் குறைகிறது. அதுவும் நல்லது தானே?" என்றான். எனக்கு ரத்தினம் கலர் டிவி-க்கு ஆதரவாக பேசுகிறானா? அல்லது எதிராக பேசுகிறானா? என்று புரியவில்லை. முகிலனின் குரல் கூடியது. "ஆமா, டிவி-ல நல்ல விசயமா போடுறான். பத்து பிள்ளைங்க ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது அதுக்கு...கெமிஸ்ட்ரி, ஹிஸ்டரி-னு விளக்கம் குடுத்திட்டு மார்க் வேற போடுறாங்க. என்ன ப்ரோக்ராம்டா அது"... இலவசத்தில் ஆரம்பித்து வெறும் டிவி-யில் வந்து நின்றது எப்போது என்று யோசித்து கொண்டிருந்தேன்.
"நீ சொன்னாலும் சொல்லாட்டிலும் மக்கள் டிவி-யால் சந்தோசமாத்தான் இருக்காங்க. அதை ஒத்துக்கோ." இது ரத்தினத்தின் வாதம். "ஆமாடா, பக்கத்துக்கு வீட்ல எழவு விழுந்தாலும் இவனுங்க, டிவி-ல வடிவேல் ஜோக் பார்த்து சந்தோசமா சிரிச்சிகிட்டு இருக்கானுங்க. மானம் இல்லாதவனுங்க." சூடானான் முகிலன்.
"உனக்கு பிடிக்கல அப்படின்னா..அது உன் பிரச்சனை. பாக்கிறவங்க எல்லாம் என்ன பைத்தியமா?. அதுவும் போக, ஒரு காலத்தில மக்களுக்கு டிவி அப்படிங்கறது கனவு மாதிரி. அந்த கனவு இப்போ நனவா இருக்கிறது நல்லது தானே?" என்றான் ரத்தினம் பொறுமையாக. முகிலன் கோபத்துடன், "ஆமா. மக்களை கனவிலேயே மூழ்கடிக்கதான் இது இருக்கு. இந்த டிவி-யால கணவன் மனைவி பேசிகிறது கூட குறைஞ்சிடுச்சி " என்றான். பொதுவாக குடி ஒருவரின் பொறுமையை மிக எளிதில் இழக்க செய்யும்.ரத்தினம் இன்னமும் பொறுமையாக இருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ரத்தினம் சொல்ல ஆரம்பித்தான், "மக்கள் கனவில் இருப்பது அவர்களின் தவறு. இவங்களுக்கு எத்தனைமுறை பட்டாலும் திருந்த மாட்டாங்க. அறிவு கம்மியான ஜனங்க இவங்க". எனக்கு குழப்பம் கூடியது. பிரச்சனை இலவசத்தில் ஆரம்பித்து வெறும் டிவி- ன் ஊடாக சக மனிதர்களை பற்றி வந்தது எப்படி?. ஒரு வேளைஎனக்கு ஏற ஆரம்பித்து விட்டதோ? யோசிக்க யோசிக்க சுழற்றியது.
மிக பெரிய ஆச்சர்யமாக முகிலனும் அதை ஆமோதித்தான். "உண்மைதான், நம்ம மக்களுக்கு பொறுப்பு கம்மி. எப்படியும் அவர்கள் சந்தோசம் அவர்களுக்கு முக்கியம். வேறு எதை பற்றியும் அவர்கள் கவலை படுவது இல்லை. நம்மால என்ன செய்ய முடியும், இதை பார்த்திகிட்டு இருப்பதை விட." அவன் தொனியில் வருத்தம்  கலந்து இருந்தது. ஆனால் எதிர்பார்கவே முடியாத படி இந்த முறை, ரத்தினம் கோப பட்டான். "என்ன செய்யிறதா? நம்ம மாதிரி சமுதாய அக்கறை இருகிறவங்கதான் இதை தடுக்க முயற்சி பண்ணனும். முடிஞ்சா அதுக்காக நம்ம வன்முறைய கூட கையில எடுக்கலாம்." என்றான். முகிலனும் அதை ஆமோதிக்க ஆரம்பித்தான். "உண்மைதான். நாமதான் இதை முடிச்சு வைக்கணும். நமக்கு பெரிய பொறுப்பு இருக்குது". எனக்கு அவர்கள் இருவரும் ஒரே புள்ளியில் இருந்தது பயத்தையும், அதே நேரத்தில்  சிறிது குழப்பத்தையும் கொடுத்தது. அந்த பயம் இது எங்கு போய் முடியும் என்ற எண்ணத்தில் ஏற்பட்டது. அந்த பயத்தோடு அந்த உரையாடலை கவனித்து கொண்டிருந்தேன். ரத்தினம் மெதுவாக என்னை நோக்கி திரும்பினான். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. "நீங்க  இதை பத்தி என்ன நினைக்கறீங்க?" என்றான். நான் உளற ஆரம்பித்தேன் "அது வந்து.. கலர் டிவி கொஞ்சம் ஓவர்தான். ஆனால் ப்ளாக் அண்ட் வொயிட் டிவி கொடுத்திருக்கலாம்" என்றேன். "அந்த பேச்சு அப்பயே முடிஞ்சிருசிங்க. இந்த பொறுப்பு இல்லாத, தப்பு செய்யிற மக்களை தட்டிகேட்க வன்முறைய கையில எடுக்கலாமா இல்லையா?" இது முகிலன். எனக்கு புரிந்து விட்டது...என் ஆபீஸ்-ல் சொன்னது நடக்க போகிறது என்று. "அது வந்துங்க...எடுக்க்கலாம்ங்க தப்பு இல்ல" ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தேன். " சார் ஒத்திகிட்டாருடா. அவரும் நம்ம ஆளுதான்" என்றான் ரத்தினம் உற்சாகமாக. எனக்கு அந்த கூட்டணி மோசமான அனுபவத்தை தரும் என்று தோன்றியது.

சிறிது நேரம் கழித்து முகிலன் மறுபடியும் என்னை பார்த்து பேச ஆரம்பித்தான். "ஆமா, ப்ளாக் அண்ட் வைட் டிவி போதும்னு சொன்னீங்களே, ஏன்?". பிரச்சனை சக மனிதர்களிடம் இருந்து மீண்டு டிவி-க்கு சென்றதில் எனக்கு சிறிது மகிழ்ச்சிதான். "அது வந்துங்க...எனக்கு மணிரத்னம், பாலு மகேந்திரா படங்கள் புடிக்கும். அவுங்க படம் ப்ளாக் அண்ட் வைட்-ல பார்த்தா நல்ல இருக்கும்". கொஞ்சம் ஓவராக பேசி விட்டேனோ என்று தோன்றியது. "ஹே..சார் படிச்சவரு போலடா" என்றான் ரத்தினம். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மணி, பாலு படம் பார்பவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்று முடிவு செய்வதாக இருந்தால், ஏன் இன்னும் அரசாங்கம் கல்லூரிகளில் சர்டிபிகேட்-களை கொடுக்கிறது?. தியேட்டர்களில் டிக்கெட் வாங்கும்போது கொடுத்து விடலாமே..என்றும் தோன்றியது. ஆனாலும் என்னை படித்தவர்கள் என்று கூறியது ஒரு வகையில் பாதுகாப்பை கொடுத்ததாக உணர்ந்தேன். மறுபடி ரத்தினமே பேசினான். "ஆமா சார். இந்த மணி, ரத்தினம், பாலு, மகேந்திரா அப்டிங்கிற நாலு பேரும் யாரு? நான் எந்த படத்திலேயும் அவங்கள பார்த்ததில்லையே?" என்றான். அடப்பாவிகளா! தண்ணி அடிச்சா ரெண்டு ரெண்டா தெரியும்னு சொல்லுவாங்க. இவனுங்க பேரையே ரெண்டு ரெண்டா புரிஞ்சிகிறான்களே!. மனதில் நினைத்து கொண்டு, விளக்கம் கொடுத்தேன். "அவுங்கெல்லாம் நடிகர் இல்லங்க. அவுங்க டைரக்டர்.  படம் எடுக்குறவங்க".
"இத பார்ரா!! கோபகாரன்களா இருப்பாங்க போலேயே! படம் எடுப்பாங்களாமுல பாம்பு மாதிரி" முகிலன் சொல்லிவிட்டு சிரிக்க ஆரம்பித்தான். நானும் ஒப்புக்கு சிரித்து வைத்தேன். ரத்தினம் சிறிது நேரம் மோட்டு வளையை பார்த்து விட்டு சொன்னான். "இந்த பொய் பேசுறவங்க. ஊர் சொத்தை கொள்ளை அடிக்கிறவங்க, தப்பு பண்றவங்க எல்லாத்தையும் நாமதான் அடிச்சு திருத்தனும்". எனக்கு மறுபடி அவர்கள் வன்முறை பக்கம் சென்றது அடி வயிற்றில் புளியை கரைத்தது. முகிலனும் அதை ஆமோதித்தான் "ஆமாடா..நாம இன்னைலிருந்தே அந்த வேலையை ஆரம்பிச்சிடலாம்." உற்சாகமாக சொன்னான். அந்த நேரத்தில் என் செல் அழைத்தது. மறுபடியும் மனைவிடமிருந்துதான். குடி குடியை கெடுக்க மறுபடி முயற்சிக்கிறது. "நான் ஒரு முக்கியமான மீடிங்க்ல இருக்கேன். சீக்கிரம் சொல்லு". மெதுவாகத்தான் சொன்னேன். அதே நேரத்தில், ரத்தினமும் முகிலனும் என்னை பார்த்து முறைப்பதை உணர்ந்தேன். ஆகா! நம்ம பொய் இல்ல சொல்லிக்கிட்டு இருக்கோம்!!. அவர்களை தவிர்க்க நினைத்து, மனைவிடம் தொடர்ந்தேன் "அப்புறம். சாப்பிட்டியா" என்றேன். அந்த பக்கம் இருந்து கோபத்துடன் பதில் வந்தது. "நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். காஸ் காலியாயிடிச்சு. சமைக்க முடியலன்னு சொல்றதுக்குதான் இந்த காலே பண்ணினேன்". நான் இவர்களை பார்த்து பயந்த பொது சொல்லி இருப்பாள் போல. "அப்படியா?" என்றேன் அப்பாவியாக. அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. ரத்தினம் எழுந்து நின்று என்னை பார்த்து கத்த ஆரம்பித்தான். "தண்ணி அடிச்சிகிட்டு இங்க இருந்துகிட்டு. அங்கிட்டு யாரு கிட்ட ஆபீஸ்-ல இருகிறதா பொய் சொல்றே?". குடி தன்னுடைய இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற ஆரம்பித்து விட்டது. ஆம். குடி குடியை கெடுக்க தொடங்கியது..
"அதானே? இவன்தாண்டா முதல் குற்றவாளி”, முகிலனும் எழுந்து நின்றான். "அது வந்துங்கா...சும்மா விளையாட்டுக்கு சொல்றேங்க..சாரிங்க" என்றேன். ஒன்றும் பலிக்க வில்லை. "பொய் சொல்லித்தான் விளையாடுவீங்களா?" கோபத்துடன் அடிக்க வந்தான் முகிலன். யாரும் அவனை தடுக்க வில்லை...நான் உட்பட. எல்லாம் முடிந்தது. பின்னந்தலையும், உதடும் மட்டும்தான் அதிகம் வலித்தது... திடீரென்று ஒரு உணர்வு..என் செல்லை பார்த்தேன். அட கொடுமையே..நான் கட் செய்யவில்லை...மெதுவாக காதில் வைத்தேன்.."ஹலோ" ஈனஸ்வரத்தில் சொன்னேன். "என்ன திமிரு இருந்தால். பொய் சொல்லிட்டு தண்ணி அடிக்க போய் இருப்பீங்க. இனிமே என் முகத்திலேயே முழிக்காதீங்க. நானும் உங்க மகனும் எங்க அப்பா வீட்டுக்கு போறோம்.." அவள் என் பதிலுக்கு காத்திருக்க வில்லை. நான் அதிர்ச்சியில் உட்கார்ந்தேன். அப்போதுதான் அந்த மாபெரும் உண்மை எனக்கு விளங்கியது...
"இந்த குடி அந்த குடியையும், அந்த குடி இந்த குடியையும் காலகாலமாக கெடுத்து கொண்டுதான் இருக்கிறது!!!.
ம்ம்ம்... காலம் கடந்த ஞானம்!

----- காளிராஜ்





மரியாதை ராமருக்கு மரியாதை போன கதை

 ஒரு ஊர்ல 'அவன்', 'இவன்' அப்படின்னு ரெண்டு பேரு இருந்தாங்களாம். ஒரு தடவை 'அவன்' இன்னொரு  ஊருக்கு ஒரு வியாபார விஷயமா போய்ட்டான். அந்த நேரம் பார்த்து இந்த இவன் நேரா போய் அவனோட வீட்டை இடிச்சிட்டு இவனோட பெயர் பலகையை வச்சிட்டானாம். இதை கேள்வி பட்ட அவன் ஓடி வந்து பார்த்தானாம். 'என்னடா இவனே இப்பிடி பண்ணிட்ட? ஏண்டா இப்பிடி பண்ணின?' அப்பிடின்னு கேட்டானாம். அதுக்கு இவன் சொன்னானாம், "இது இன்னைலருந்து சரியாய் 107 தலைமுறைக்கு முன்னாடி என்னோட முப்பாட்டன்க இருந்த இடமடா. ஒரு 50 தலை முறைக்கு முன்னாடி உங்க முப்பாட்டாங்க அதை பிடுங்கி அவங்க வச்சிகிட்டாங்க".
அவனுக்கு ஒரே குழப்பமா ஆயுடுச்சாம். "இத எப்டிடா நீ சொல்ற? உனக்கு யாரு சொன்னா?" அப்பிடின்னு கேட்டானாம். இவன் சொன்னானாம் "எங்க பரம்பரைக்குன்னு ஒரு பாட்டு உண்டு. அந்த பாட்டில எங்க முப்பாட்டன்க பிறந்து வளர்ந்த இடமா சொன்னது இதைதான்னு நான் முழுசா நம்புறேன். அவ்வளவுதான்".
 அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேருக்கும் இந்த தகராறு முத்தி போய் அடிதடி ஆகி போச்சாம். அப்போ ஊர் பெரியவங்க எல்லாம் சேந்து "ஏண்டா இப்பிடி அடிச்சிகிறீங்க. நம்ம தலைநகரத்தில் மரியாதை ராமர் அப்பிடின்னு ஒருத்தர் இருக்காரு. அவர் தீர்த்து வைக்காத பிரச்சனைகளே இல்லை. பேசாம நீங்க ரெண்டு பேரும் உங்க வழக்கை அவர் கிட்ட கொண்டுபோங்க. ஒரு நல்ல முடிவு கிடைக்கும்" அப்பிடின்னு சொன்னாங்க. அவனும் இவனும் சரின்னு ஒத்துகிட்டு மரியாதை ராமரை பார்க்க போனாங்க.
மரியாதை ராமருக்கு இந்த வழக்கை எளிதா முடிச்சிரலாம் அப்பிடின்னு முதல் தடவை விசாரிக்கும்போதே தெரிஞ்சி போச்சாம். ஆனா இந்த இவன் ரொம்ப நம்பிக்கையாய் சொன்னது அவரை யோசிக்க வச்சிடிச்சாம். 'நீங்க ரெண்டு பேரும் போயிட்டு அடுத்த வாரம் வாங்க" அப்பிடின்னு அனுப்பி வச்சாராம். அப்புறம் அவரோட கூட்டாளிங்க கூட உக்கார்ந்து பேசுனாராம். 'இந்த அவன் சொல்றதா பார்த்தா உண்மை மாதிரி தெரியுது. என்ன பண்ணலாம்?' அப்டின்னு கேட்டாராம். அந்த கூட்டத்தில ஒரு வயசான ஆள் இருந்தாராம். அவர் ரொம்ப அனுபவ சாலி கூட. அவர் சொன்னாராம், 'ஐயா, நம்ம ஊரு சட்டப்படி ஒருத்தரு ஒரு வீட்டுல 13 வருஷம் தங்கி இருந்தாலே அந்த வீடு சொந்தம்னு சொல்லி இருக்கு. அப்படி இருக்கும்போது, அவன் 50 தலை முறைக்கு மேல இருந்த ஒரு வீட்ட திடீர்னு வந்து இப்படி கேட்கிறது இவனோட தப்பு. அதனால் இது அவனுக்குதான் சொந்தம்" .
மரியாதை ராமருக்கு கோபம் வந்திரிசாம், 'அதுக்காக நூறு தலை முறைக்கு முன்னால நடந்த தப்ப நாம சரி செய்யகூடதா?" அப்பிடின்னு கேட்டாராம். அதுக்கு அந்த பெரியவரு சொன்னாராம், "ஐயா, 100 தலைமுறைக்கு முன்னால நாம எப்பிடி இருந்தோம்னு யாருக்கும் தெரியாது. உங்க முப்பாட்டன்க என் முப்பாட்டன்கள கொன்னு கூட இருக்கலாம். அதுக்காக இப்போ நான் உங்களுக்கு தண்டனை குடுக்க முடியுமா? நாம இப்போ வாழுற கால கட்டத்தில நடந்ததுக்கு மட்டும்தான் தீர்ப்பு தர முடியும். மிஞ்சி போனா ரெண்டு இல்ல மூணு தலை முறை வரைக்கும் சொத்தை ஆராய்ஞ்சு பார்க்கலாம். அதுக்கு மேல பண்ண கூடாது, பண்ணினாலும் அது நல்லா இருக்காது" ன்னு சொன்னாராம்.
மரியாதை ராமருக்கு  குழப்பம் கூடி போச்சாம். "சரி விடுங்க இந்த தீர்ப்பை நான் பார்த்துகிறேன்" அப்படின்னு சொல்லிட்டாராம்.
அடுத்த வாரமும் வந்திருச்சாம். மரியாதை ராமர் முதல்ல இவன் கிட்ட கேட்டாராம், "நீ எப்படி இவ்ளவு உறுதியாய் இது உங்க முப்பாட்டன்க இருந்து எடம்னு சொல்றே". அதுக்கு இவன் சொன்னானாம், "ஐயா, நம்பிக்கைதான் வாழ்கை. நாம் இதை பரி பூரணமா நம்பிறேன்". அப்படியே அவன் கிட்டயும் கேட்டாராம். அவன் சொன்னானாம், "ஐயா, எனக்கு அதல்லாம் தெரியாது, எங்க அப்பன், தாத்தன் இந்த வீட்ல இருந்ததை நான் கண்கூடா பார்த்தவன், அவுங்களும் அவங்க அப்பன் தாத்தன் வாழ்ந்ததை பார்த்திருக்காங்க. என்னிக்கோ நடந்ததை அல்லது நடந்ததா சொல்றத இன்னிக்கி எப்படி ஐயா நான் நம்பிறது?"
மரியாதை ராமர் நல்லா யோசிச்சாராம். யோசிச்சிட்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பிச்சாராம் "இந்த வழக்கை மேம்போக்க பார்த்தா அவனுக்கு இந்த எடம் சொந்தம்னு தோணும். எல்லா நியாங்களும், சட்டங்களும் கூட அதைதான் சொல்லுது. ஆனா, இவனோட அந்த நம்பிக்கை எனக்கு பிடிச்சிருக்கு. அதுக்கும் மேலஇந்த இவனோட நம்பிக்கை மேல எனக்கும் நம்பிக்கை இருக்கு. இந்த சட்டம் மட்டும் இல்லைனா இந்த தீர்ப்பு மாறி இருக்கும். இருந்தாலும் இப்போதைக்கு இந்த சட்ட எளவு இருகிறதால, அந்த இடத்தை இவனும் அவனும், சரி சமமா பிரிச்சிக்க நான் தீர்ப்பு சொல்றேன்" அப்ப்டினாராம்.
அவனுக்கு ஒரே வருத்தமா போச்சாம். என்னடா இப்பிடி ஆகி போச்சே? அப்டின்னு. அப்போ இவன் வந்து அவன் கிட்ட சொன்னான் "ஆனது ஆகி போச்சி. மரியாதை ராமரே எனக்கு இந்த எடம் சொந்தம்னு சொல்லிட்டாரு. அதனால நீயே பெருந்தன்மையோட மீதி இடத்தையும் விட்டு குடுத்துடு". அவனுக்கு இன்னும் வருத்தம் வந்திருச்சாம். அவன் சொன்னானாம், "இப்போ தீர்ப்பு இப்படி வந்தாலும் என்னோட வீட்ட நீ அத்துமீறி நுழைஞ்சி இடிச்சது தப்பு. அதுக்கு நான் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுப்பேன்". இதை கேட்டுட்டு இவன் சிரிச்சானாம். சிரிச்சிகிட்டே சொன்னானாம், "போடா பைத்தியகாரா, இந்த எடமே எனக்கு சொந்தம்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க. என் எடத்தில இருந்த வீட்டை நான் இடிச்சது எப்படிடா தப்பாகும்". அன்னியோட அவன் இடிஞ்சி போய் உக்காந்தானாம். ஊரு மக்கள் எல்லாருக்கும் வருத்தம் அதிகமா ஆயிடிச்சாம் மரியாதை ராமர் இப்படி ஒரு தீர்ப்ப சொல்லி நம்ம நம்பிக்கையை பாழாகிட்டாரே  அப்பிடின்னு. அன்னிகிருந்து எல்லாரும் மரியாதை ராமரை 'ராமர்'னு மட்டும் கூப்பிட ஆரம்பிசிடாங்கலாம். இதுதான் மரியாதை ராமருக்கே மரியாதை போன கதை.
பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனை கதை. இதற்கும்  ராமர் கோவில் வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறி கொள்கிறேன்.
                                                        ----- காளிராஜ்




நீங்களும் உங்க பள்ளிக்கூடமும்!!
சங்கருக்கு எல்லாமே அதிசயம்தான். காக்கா-குயில் சண்டை, ஆற்றிலே போகும் வைக்கோல், மச்சி வீட்டு தாத்தா சொல்கிற கதை, மாமன் கறிக்குழம்பு சாப்பிடுவது எல்லாமே அதிசயம் தான். அது எதுவும் இப்போ பிரச்சனை இல்லை. பாடம் படிக்கிற பக்கத்து வீட்டு பசங்களும் அதிசயம் ஆனதுதான் இப்ப நடக்கிற பிரச்சனைக்கு காரணம். மேலத்தெரு முழுசா ஓடி முடிச்சிட்டு திரும்பி பார்த்தாலும் அவன் அம்மா துரத்தி வந்துகிட்டு இருக்காங்க. அவனும் என்னதான் செய்வான்?. பள்ளிகூடத்தில இருக்கிற குருவி கூடு மேலதான் கவனம் போகுதே தவிர மறந்தும் கூட பாடம் மேல போக மாட்டேங்குது. எல்லா வாத்தியாரும் இவனை அடிக்கிறதுக்கு மட்டும் சம்பளம் வாங்குகிற மாதிரி, அதே வேலையாக இருப்பது வேறு இவனுக்கு பிடிக்கவில்லை.  இதுக்கும் மேல ஓடுனா ராத்திரி சாப்பாட்டுக்கு கூட திரும்பி வர முடியாது அப்பிடின்னு நினைச்சு.. சமாதான கொடியை பறக்க விட்டான். அம்மா அம்மா இனிமே ஒழுங்க பள்ளிக்கூடம் போறேன்மா... வாத்தியார் சொல்லி குடுக்குறத நல்லா கவனிக்கிறேன்மா. கொடி வேலை பார்த்தது. இரண்டு அடியோடு அம்மா நிறுத்தினாள். நீ நல்லா படிச்சாதானப்பா, அம்மாவை காப்பத்த முடியும். ஒழுங்கா பள்ளிக்கூடம் போடா தம்பி.. அம்மாவின் பேச்சு சங்கரின் மனதை என்னமோ செய்தது. இனி என்ன ஆனாலும் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
              சங்கர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன். பள்ளிக்கூடம் போக என்ன பயம் அவனுக்கு?. பள்ளிகூடத்தில் என்ன பாம்பும் பல்லியுமா இருக்கு? உண்மையை சொன்னால் பாம்பும் பல்லியும் சங்கருக்கு ரொம்ப புடிச்ச விஷயங்கள். பிறகு என்னதான் அவனுக்கு பிரச்சனை?..
        மறுநாள் பள்ளிக்கு கிளம்பினான் சங்கர்.  போகும் வழியில் இருந்த அம்மன் கோவிலில் பிள்ளையாரை மட்டும் கும்பிட்டான். அது ஏன் பிள்ளையார் மட்டும்.?..ஆறாம் வகுப்பு சேர்ந்த நாளில் இருந்து வாத்தியார் கிட்ட அவன் அடி வாங்காத  நாள் ஒன்று கூட இல்லை. ஒரு நாள்  முடிவு பண்ணினான். இனிமே ஒரு நாளைக்கு ஒரு சாமியை கும்பிடுவோம். எந்த சாமி நம்ம அடிவாங்காம காப்பத்துதோ..அந்த சாமியை வாழ்கை முழுவதும் கும்பிடனும். ஒவ்வொருத்தராக ஆரம்பித்தான். சிவன், கிருஷ்ணன், முருகன், ஏன் கருப்பசாமி கூட கை விட்டுட்டாங்க..அதுவும் அவன் கருப்பசாமியை கும்பிட்ட அன்னிக்கு வாத்தியார் அடிக்கும்போது வலிக்குதுனு கத்தினதுக்காக பக்கத்து வகுப்பு வாத்தியாரும் சேர்ந்து வந்து அடிச்சாங்க... இனிமே கருப்பசாமி இருக்கிற் பக்கம் கூட தலை வச்சுகூட  படுகிறது இல்லன்னு மனசுக்குள்ள அன்னிக்கே நினைச்சிகிட்டான். வெள்ளிக்கிழமை பிள்ளையாரை கும்பிட்டு போனான். என்ன ஆச்சர்யம். அன்னிக்கு ராஜீவ்காந்தி இறந்ததால பள்ளிக்கூடம் லீவு விட்டுட்டாங்க... அவனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. தான் ஒருத்தன் அடி வாங்க கூடாதுன்னு, இவ்வளவு பெரிய விஷயம் செஞ்ச பிள்ளையாரை அவனால மறக்கவே முடியல. அன்னிக்கு முடிவு பண்ணினான். என்ன ஆனாலும் இனி பிள்ளையார்தான்...
      வகுப்பில நுழைஞ்சதும்...வழக்கமா தான் உட்காருகிற கடைசி பெஞ்ச்ல போய் உட்கார்ந்தான். அவனுக்கு அந்த இடம்தான் ரொம்ப பிடிக்கும். முக்கியமான காரணம்..அங்க உட்கார்ந்துதான் முழு வகுப்பையும் அவனால பார்க்க முடியும். குருவி கூடு உட்பட. பக்கத்தில் உட்கார்ந்திருந்த கணேஷிடம் கேட்டான் முதல் பாடவேளை என்னடா?.. ம்ம். இங்கிலீஷ். முதல் ரெண்டு பாடவேளையும் என்றான் கணேஷ். இவன் எப்பவுமே இப்பிடித்தான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு பேசாம இருப்பான். ஆனால் படமெல்லாம் பயங்கரமா வரைவான். ஒரு நாள் அப்படிதான் ரஜினிகாந்தை அப்பிடியே வரைஞ்சு கொண்டு வந்தான். அதுதான் இப்போ சங்கரோட தமிழ் பாடபுத்தகத்தோட அட்டையில இருக்கு.
            சங்கருக்கு சின்ன வயசில ஒரு சந்தேகம் உண்டு. பக்கத்துக்கு வீட்டு ராஜா அண்ணன் இங்கிலீஷ்-ல பெயில் ஆகும்போது... என்னடா இது? இருபத்தியாறு எழுத்து இருக்கிற இங்கிலீஷ்-ல ஏன் பெயில் ஆனாங்க? ஆனா...அதை விட பல மடங்கு அதிகம் எழுத்து இருக்கிற தமிழ்-ல பாஸ் ஆயிட்டாங்க. அப்படி ஒரு எண்ணம அவனுக்கு இருந்தது உண்மைதான்.---ஆறாம் வகுப்பு சேருகிற வரைக்கும். இப்போ அதே பிரச்சனை அவனுக்கும் இருக்கு. இஸ் போடறதா வாஸ் போடறதா என்ற குழப்பம்..வாழ் நாள் முழுசுக்கும் வருமோ..அப்பிடின்னு நிறைய தடவை யோசிச்சிருக்கான். இப்பவும் அதை பத்தி நினைசிகிட்டே இருக்கும்போது...வாத்தியார் உள்ள வந்தார். நல்லா பாடம்  எடுப்பாரு அப்பிடின்னு சங்கருக்கு தெரியும். ஆனா இது வரைக்கும் என்ன எடுக்குறாருன்னு புரிஞ்சதே இல்ல. இன்னிக்கும் ஆரம்பிச்சாரு. எல்லாரும் பாட புத்தகத்தை எடுத்து வைங்கடா..மூணாவது பாடம் ஆளுக்கு ஒரு வாக்கியம் படிங்கடா. சங்கர் நீ ஆரம்பி.. சங்கருக்கு தெரிஞ்சிடிச்சு. இன்னிக்கு பொழுது முதல் பாடவேளையிலையே ஆரம்பிச்சிடிச்சு. புத்தகத்தை தேடி பார்த்தான். அப்போதான் ஞாபகம் வந்தது. நேத்து ரஜினி படம் ஓட்ட வைக்க தமிழ் புத்தகம் இங்கிலீஷ் புத்தகம் ரெண்டையும் எடுத்து வச்சு.. அப்புறம்.. இங்கிலீஷ் புடிக்காதுனு முடிவு பண்ணி.. தமிழ் புத்தகத்துல ஒட்டுனான். அப்புறம் எடுத்து வைக்க மறந்திட்டான். சார்! பாட புத்தகத்தை மறந்து போய் வீட்ல வச்சிட்டு வந்திட்டேன் சார்.. உடனே ஒப்புதல் வாக்குமூலம் குடுத்தான். ஏண்டா...பாட புத்தகத்தை வீட்ல வச்சிட்டு இங்க எதுக்கு வந்தே...விளையாட்ரதுக்கா.. சொல்லிட்டு பக்கத்தில வந்து காத புடிச்சு திருக ஆரம்பிச்சார். வலிக்க ஆரம்பித்தது.. ஆனா கத்தினா வேற வாத்தியாரும் வந்து அடிப்பாரோ அப்டின்னு தாங்கிகிட்டான். ஆனா அது இப்படி ஆகுமென்று அவன் நினைச்சு கூட பார்க்கவில்லை.. என்ன திருகு திருகிறேன். கல்லூளிமங்கன் மாதிரி இருக்கியேடா? இரு பக்கத்துக்கு வகுப்பு பால்ராஜ் சாரை வர சொல்றேன்..அவரு அடிச்சா..மாட்டுக்கு கூட வலிக்கும். சொல்லிட்டு உண்மையிலேயே கூப்பிடுவதற்காக சென்றார்.. எது நடக்க  கூடாதுன்னு நினைச்சி கத்தாம இருந்தானோ அதுவே நடந்திருச்சி. அதுக்கு அப்புறம் நடந்ததை அவன் நினைச்சு கூட பார்க்க விரும்பவில்லை.
        பாடவேளை முடிந்தது. சங்கர் அப்படியே உட்கார்ந்திருந்தான். அடுத்த பாடவேளை என்னவென்று பார்த்தான். தமிழ். ஒரு நிம்மதி பெருமூச்சி விட்டான். தமிழ் வாத்தியார் ரொம்ப நல்லவர். இதுவரைக்கும் அவர்கிட்ட மட்டும்தான் அவன் இன்னும் அடி வாங்கவில்லை. தமிழ் வாத்தியார் உள்ளே வந்தார். அவரிடம் மட்டும் உள்ளேன் ஐயா என்று சொல்ல வேண்டும். அதுவே சங்கருக்கு வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். பாடம் எடுக்க ஆரம்பித்தார். அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத்  தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. சங்கருக்கு எதுவும் புரிய வில்லை. பார்த்து கொண்டே இருந்தான். வாத்தியார் பேச ஆரம்பித்தார். இதுக்கு அர்த்தம. தன்னை தோண்டுகிற மனிதர்களை கூட பூமி தாங்குகிறது. அது போல தன்னை திட்டுபவர்களையும் நாம் பொறுத்து கொள்வது நல்லது. சங்கருக்கு புரிந்தது. ஆனால் எப்பவும் தமிழ் செய்யுள் படிக்கும்போது வரும் சந்தேகம் இப்போதும் வந்தது. ஏன் வள்ளுவர் எளிமையாக எழுதாமல் அகழ்வார், இகழ்வார் அப்பிடின்னு ரொம்ப கஷ்டமான வார்த்தைகளை வைத்து எழுதினார். மத்தவங்களுக்கு புரியும்படி எழுதுனா தானே படிச்சிட்டு எல்லாம் அதே மாதிரி நடப்பாங்க. இந்த மாதிரி கஷ்டமா எழுதுனா யாரவது ஒருத்தர் வந்து விளக்கம் சொன்னாதான் புரியுது. சங்கருக்கு வள்ளுவரின் நோக்கம் மீதே பயங்கர சந்தேகம் வந்தது.  இந்த வள்ளுவர் மட்டும் இல்ல. தமிழ் எழுதுகிற எல்லாரும் இப்படித்தான். புரியாம எழுதியே பழக்கபட்டவங்க போல. இதாவது பரவாயில்லை. எல்லாருக்கும் தெரிஞ்ச ராமாயணத்தை அந்த கம்பர் எழுதினதை ஒரு நாள் இதே வாத்தியார் எடுக்கும்போது ஏதோ புரியாத மொழியில் பேசுன மாதிரியே சங்கருக்கு இருந்தது. வாராவாரம் டி.வி.யில் பார்க்கும்போது இருக்கிற சந்தோசம் அவனுக்கு சுத்தமாக படிக்கும்போது வரவில்லை. இதை பத்தி யோசிச்சிட்டு இருக்கும்போது.. வாத்தியார் கூப்பிடுவது காதில் விழுந்தது. சங்கர். எங்க இருக்க?. அருகில் வந்தார். சொல்லு! நான் என்ன சொன்னேன்?. சங்கருக்கு இவருமா என்று பயம் வந்தது.. அகழ்வாரை .... ஆரம்பித்தான். குறுக்கிட்ட வாத்தியார் அதை பத்தி பேசி அரை மணி நேரம் ஆகுது. இப்போ என்ன சொன்னேன் சொல்லு. சங்கருக்கு என்ன நடந்தது என்று நினைவில் இல்லை. அவன் வள்ளுவரையும் கம்பரையும் திட்டி கொண்டிருக்கும்போது ஏதோ சொல்லிருப்பார் போல. இனிமே வள்ளுவரையும் கம்பரையும் திட்டவே கூடாது என்று நினைத்து கொண்டான். துரை. வகுப்புல உட்கார்ந்திகிட்டு கனவில இருக்கீங்க போல. அந்த திடீர் மரியாதை சங்கருக்கு பயத்தை கொடுத்தது. அவன் கையில் இருந்த புத்தகத்தை வாங்கினார் வாத்தியார். அவர் கண்ணில் முதலில் அகப்பட்டது ரஜினி படம்தான். படிக்கிற புத்தகத்தில் கண்ட பயக படம் ஒட்டி வச்சா படிப்பு எப்படி வரும்?.. அவருக்கு கோபம் வந்து முதல் முறையாக பார்க்கிறான். அவர் ஒருவேளை கமல் படம் பார்க்கிற ஆளா இருப்பாரோ?.. யோசித்து கொண்டிருந்தான். இவருக்கு ரஜினி பிடிக்காது என்று அவனுக்கு எப்படி தெரியும். அவன் கண் முன்னால் அந்த படத்தை கிழிக்க ஆரம்பித்தார். சங்கருக்கு கணேஷை நினைத்தான் பாவமாக இருந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் வரைந்திருப்பான். கிழித்த படத்தை கையில் எடுத்து கொண்டு நடந்தார். இவருக்கு எதுக்காக இந்த படம். இவருக்கு ரஜினி பிடிக்குமா பிடிக்காதா?..சங்கர் குழப்பத்தில் உச்சிக்கே சென்றான். இனிமே யாரவது இந்த மாதிரி புத்தகத்தில் எவன் படத்தையாவது ஒட்டி பார்த்தேன்.. தொலைச்சிடுவேன்.. வகுப்பே அமைதியாக இருந்தது. உட்காருங்க துரை. ஒழுங்கா படிக்கிற வழிய பாருங்க. சங்கருக்கு அடி வாங்கததில் சந்தோசம்தான். ஆனாலும் இது வரை திட்டாத வாத்தியார் திட்டுனது மனதை என்னமோ செய்தது. கவனமாக அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தான். அவ்வப்போது கவனம் அவர் சட்டை பையில் இருந்த ரஜினி படம் மேலும் சென்றது. பாடத்தை முடித்தார். வெளியே போகும்போது ஒரு நிமிடம் யோசிச்சிட்டு. சட்டை பையில் இருந்த ரஜினி படத்தை கையில் எடுத்தார். சங்கர் அவரையே பார்த்து கொண்டிருந்தான். தாளை சுக்குநூறாக கிழித்து குப்பை கூடையில் போட்டார். சங்கருக்கு பெரும் குழப்பம் தீர்ந்தது. அவர் கண்டிப்பா கமல் படம் பார்க்கிறவர்தான் என்று நினைத்து கொண்டான். கணேஷ் கேட்டான். ஒழுங்கா நானே வீட்ல வச்சிருப்பேன் இல்ல?. இப்பிடி பண்ணிட்டேயடா. இனிமே என் கூட பேசாத. சங்கருக்கு பாவமாக் இருந்தது. அவன் என்ன செய்வான். நல்லா இருக்குன்னு ஒட்டி வச்சது இப்படி ஆகும்னு அவனுக்கு தெரியாது. அவருக்கு கமல் புடிக்கும்னா அவர் புத்தகத்தில் கமல் படம் ஓட்ட வேண்டியது தானே?. என் புத்தகத்தில் இருக்கிற படத்தை எதுக்கு கிழிக்கனும். அப்படியே ஒட்டுனது தப்புன்னாலும் என்னை அடிக்க வேண்டியது தானே. எதுக்கு படத்தை கிழிக்கனும். சங்கருக்கு கோபம பயங்கரமாக வந்தது. எல்லா வாத்தியாரும் இப்படித்தான். கணேஷ் பேச மாட்டேன் என்று சொன்னது வேறு அவனுக்கு வருத்தமாக இருந்தது. கோபமும் அழுகையும் மாறி மாறி வந்தது. கணேஷுக்கு வேறு ஒரு நல்ல படம் வாங்கி கொடுக்க வேண்டும். கணேஷை பார்த்து சொல்ல ஆரம்பித்தான்.அதற்குள் சமூக அறிவியல் வாத்தியார் உள்ளே நுழையவே அமைதியாக இருந்து விட்டான்.

  சமூக அறிவியல் வாத்தியாரை பார்த்தால் பள்ளியே பயப்படும். எப்பவும் சிவப்பான கண்கள். சிரிக்காத முகம். நல்ல பருமனான உடம்பு. கையில் எப்போதும் ஒரு தடிமனான கம்பு அடிப்பதற்கு. பார்த்தாலே பயம் வரும். சங்கருக்கும் அதே பயம் வந்தது. இன்னிக்கு ஒவ்வொருத்தனையும் கேள்வி கேட்க போறேன். பதில் சொல்லிட்டு வேற ஒருத்தன் பேரை சொல்லிட்டு உட்காருங்க. அடுத்த கேள்வி அந்த பையனுக்கு. பதில் தெரியலை, ரெண்டு ரெண்டு அடி கையிலே.. ஆரம்பிக்கும்போதே இப்படித்தான் ஆரம்பித்தார். சங்கருக்கு சமூக அறிவியலில் ஒரு அளவுக்கு ஆர்வம உண்டு. காந்தி, நேரு, இந்தியா இதை பற்றி படிக்கும்போது ஒரு கதை படிப்பது போன்று இருந்ததினால் அவனுக்கு பிடித்திருந்தது. ஆகையால் கொஞ்சம் தைரியமாகவே இருந்தான்.
     முதல் கேள்வி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு எது?. வாசு நீ சொல்லு. . சங்கருக்கு ஏமாற்றமாக இருந்தது. வாசு நன்றாக படிக்கிற பையன். முதல் பெஞ்ச்லதான் எப்பவுமே உட்காருவான். அவனுக்கு போய் இப்படி ஒரு எளிதான கேள்வி கேட்டுடாறேனு அவனுக்கு பயங்கர வருத்தம். “1947 சார். உடனே சொன்னான் வாசு. குட். ஒருத்தன் பேரு சொல்றா அடுத்த கேள்விக்கு. பாராட்டும்போது கூட அவர் முகம் கடுமையாக இருப்பதாக தோன்றியது சங்கருக்கு. வாசு எப்படியும் தன் பெயரை சொல்ல மாட்டான். என்ற எண்ணம் சங்கருக்கு உண்டு. வாசுவும் கடைசி பெஞ்ச் மாரிமுத்துவும் அடிக்கடி சண்டை போடுவார்கள். அதனால் எப்படியும் அவன் பெயரைத்தான் சொல்வான் என்று சங்கருக்கு தெரியும். மாரிமுத்து சார். எதிர்பார்த்தது போலவே சொன்னான். வகுப்பே சிரித்தது. மாரிமுத்துவின் திறமை இந்த வகுப்புக்கே தெரியும். இன்னும் அனா, ஆவன்னா கூட கோர்தாப்புல சொல்ல தெரியாதவன். அப்பவும் வாத்தியார் முகத்திலே சிரிப்பே இல்லை. ஜனாதிபதியின் பதவிகாலம் எவ்வளவு ஆண்டுகள்? இந்த கேள்வி மாரிமுத்துவுக்கு. அதற்குள் குடிமையியல் பாடத்திற்கு தாவி விட்டாரே என்று நினைத்தான் சங்கர். இந்த கேள்வி கேட்பதற்கு, கேட்காமலே அடித்திருக்கலாம் என்றும்கூட நினைத்து கொண்டான். மாரிமுத்து வாயை திறக்கவே இல்லை. அடி வாங்க கையை மட்டும் நீட்டினான். சங்கருக்கு அந்த அடி காதில் சிறிது நேரம் கேட்டு கொண்டே இருந்தது. வயிற்றுக்குள் என்னமோ செய்தது. மாரிமுத்து அடுத்த பெயரை சொல்லும்போது வகுப்பே அமைதியாக இருந்தது. கணேஷ் சார். என்றான்.
            கணேஷ் கடைசி பெஞ்சில் இருந்தாலும் மிகவும் கெட்டிக்காரன். உடனே சொல்ல ஆரம்பித்தான். ஐந்து ஆண்டுகள் சார் அடுத்தது சங்கர். அவர் கேட்கமேலே தன் பெயரை சொன்னதை சங்கர் எதிர்பார்க்கவே இல்லை. ஒருவேளை  முதல் கேள்வி  வரும்போதே முடிவு செய்திருப்பான் போல. படம் கிழித்தது அவன் நினைவில் இருந்து போக வில்லை என்றும் புரிந்துகொண்டான். சங்கர் இன்னும் கொஞ்சம் தைரியமாகவே  இருந்தான். வாத்தியார் எதுவும் பேசாமல் பலகையை நோக்கி நடந்தார்.
           சங்கருக்கு ஆச்சரியம். தனக்கும் கேள்வியை வாசித்தாலே புரியுமே எதற்கு எழுத போகிறார் என்று தெரியவில்லை. பலகையில் ஏதோ வரைய ஆரம்பித்தார். சங்கருக்கு ஆர்வம தாங்க முடியவில்லை. ஒருவேளை வரைபட ஆசிரியர் வேலையும் இவரே செய்கிறாரோ என்று சந்தேகபட்டான். வரைந்து முடித்து விலகினார். சங்கருக்கு அது முழுதாக தெரிந்தது. இரண்டு கையையும் நீட்டி கொண்டு ஒரு பொம்மை நிற்பது போன்ற படம். சங்கருக்கு இன்னும் குழப்பம் அதிகரித்தது. எந்த பொம்மைக்கும் சமூக அறிவியல் பாடத்துக்கும் இருக்கும் இணைப்பு அவனுக்கு எவ்வளவு யோசித்தாலும் புரியவில்லை. மிக மிக எதிர்பார்போடு வாத்தியார் முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.
ம்.ம். வாடா. வந்து பம்பாய் எங்க இருக்குன்னு குறி சங்கரை முழு அதிர்ச்சி அப்போதுதான் தாக்கியது. இது இந்திய வரைபடம் என்று அவன் கனவில் கூட நினைத்தது இல்லை. இந்தியா இவ்வளவு மோசமாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் அவன் இந்தியா  விளையாடும் கிரிக்கெட் கூட பார்த்திருக்க மாட்டான். இந்தியாவின் நிலைமை மிக பரிதாமாக இருப்பதாக சங்கருக்கு பட்டது. அவன் நிலை அதை விட மோசம என்பதையும் உடனே உணர்ந்து கொண்டான்.
       அது இந்தியாவின் படம் என்பதையே அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதில் பம்பாயை போய் எங்கு தேடுவது. வாத்தியார் மேல் பயங்கர கோபம வந்தது. அவருக்கு வரைபட பாடமே இருந்திருக்காது போல.இவ்வளவு மோசமாக படம் வரைந்தால் சங்கரின் வரைபட ஆசிரியர் அடிக்கும் அடி வீடு வரைக்கும் கேட்கும்.
     சங்கர் பலகையின் அருகில் போய் நின்று பார்த்தான். எப்படி பார்த்தாலும் அவனுக்கு அந்த படம் இந்தியாவின் படமாக தெரியவில்லை. கோபமும் அழுகையும் வந்தது. படம் போட தெரியாத வாத்தியார் கிட்ட தான் ஏன் படிக்கவேண்டும் அடி வாங்க வேண்டும் என்று யோசித்தான். திரும்பி நின்று பார்த்தான். அவர் இவனையே பார்த்து கொண்டிருந்தார். இது இந்தியா படமே இல்ல சார். தப்பு தப்பா படம் போட்டு இருக்கீங்க. என்னால இதுல பம்பாயை கண்டு பிடிக்க முடியாது சார். எங்கிருந்துதான் அவனுக்கு அவ்வளவு தைரியம் வந்ததோ. வாத்தியார் கண்கள் மேலும் சிவந்தன. கையை நீட்டுடா என்றார். சங்கருக்கு புரிந்து விட்டது, இனி என்ன நடக்கும் என்பது. இந்த மாதிரி வாத்தியார் கிட்ட அடி வாங்குவதற்கு பதில் பள்ளிக்கூடம் போகாமல் அம்மாவிடமே அடி வாங்கிடலாம் என்று முடிவோடு, வகுப்பை விட்டு ஓட ஆரம்பித்தான். நில்லுடா வாத்தியாரின் குரல் பள்ளி முழுவதும் கேட்டது. சங்கருக்கு  நிற்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை. பள்ளி வராண்டா கடைசியில் நின்று கொண்டு திரும்பி பார்த்தான். வாத்தியார் வகுப்பை விட்டு வெளியே வந்து இவனை பார்த்து கொண்டிருந்தார். அடி வயிற்றில் இருந்து கத்தினான் சங்கர்                           
            போங்கடா நீங்களும் உங்க பள்ளிக்கூடமும்.

----- காளிராஜ்







பாரத சமுதாயம் வாழ்கவே!!

நள்ளிரவு மணி 12:00. பாங்காக் விமான நிலையம். மனைவி, குழந்தையை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இன்னும் 20 மணி நேரம் சென்னை விமானத்துக்கு காத்திருக்க வேண்டும் என்ற நினைப்பே அயர்ச்சியை கொடுத்தது. தானியங்கி நடை பாலத்தில் என்னுடைய உடமைகளை வைத்து விட்டு நான் கூடவே நடந்து கொண்டிருந்தேன். அனைவரும் என்னை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்து அங்கிருந்து நகர்ந்தேன். வைரமுத்து கவிதை நினைவுக்கு வந்தது "காக்கை கூட உன்னை கவனிக்காது. ஆனால் உலகம உற்று பார்ப்பதை போல் உணர்வாய்.- காதலித்து பார்."...காதலித்து பார் என்பதுக்கு பதிலாக "கூட்டத்தில் தனியனாக இருந்து பார்" என்று மாற்றி கொள்ளலாம்.
        ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து என்னிடம் இருந்த் நோக்கியா-வில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இந்த நோக்கியா ஸாஃப்ட்வேர் கண்டிப்பாக இந்தியர்களால் எழுதப்படவில்லை என்று நினக்கிறேன். இதை எழுதியவர்களுக்கு கிரிக்கெட் தெரியவில்லை. நமக்கோ அதை விட்டால் வேறு எதுவும் தெரியாது. ஆம். எதிர் அணி 40 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்-களையும் இழந்திருக்க இந்தியா 120 ஒட்டங்களை தாண்டி விளையாடி கொண்டிருந்தது. ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளும் பதக்கங்களை எண்ணி பட்டியலை பார்த்து கொண்டிருக்க... நாம் மட்டும் பதக்க பட்டியலில் நமது பெயாராவது இருக்குமா என்று பார்த்து கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. நாமும் இதற்கு முழு பொறுப்பாளி. எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. எப்பொழுதல்லாம் எனக்கு ரத்த அழுத்தம் உயர்கிறதோ அப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் போல் உணர்வேன். விமான நிலையத்தில் தண்ணீரா?.. பழச்சாறு குடித்து விட்டு வந்து அமர்ந்தேன். அப்பொழுதுதான் அந்த தருணம் வந்தது. ஒரு நல்ல அழகான பெண் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். அநேகமாக ஆஸ்திரலிய பெண்.... பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.... பொழுது போவதற்கு நல்ல வழி கிடைக்க போகும் மகிழ்ச்சியில் அவளை பார்த்து புன்னகைத்தேன். அவளும் தான்!!. ......

     அவள் அருகில் வந்தாள். என்னிடம் பேச தொடங்கினாள். "டூ யூ ஹாவ் நோக்கியா சார்ஜர்?".... அப்பொழுதுதான் எனக்கு உரைத்தது. அவள் என்னை நோக்கி வரவில்லை என் கையில் இருந்த நோக்கியா செல்போனை நோக்கி  விட்டு வந்திருக்கிறாள் என்று. இருக்கிறது என்று சொல்ல ஆசைதான் என்றாலும்... அப்படி சொன்னால் அதை கொடுக்க வேண்டியதிருக்குமே.. இல்லாததை எப்படி கொடுப்பது?.. ஆகையால் பொய்யாமை பொய்யாமை செய்தேன். வள்ளுவன் வாக்குப்படி நடந்ததால் அந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமும் என்னை விட்டு நகர்தது...

    மறுபடியும் விளையாட ஆரம்பித்தேன். எப்போது கண்ணயர்ந்தேன் என்று எனக்கே நினைவில்லை. தேமதுர தமிழோசை கேட்டு எழுந்தேன். "எலே. இங்கிட்டு உக்கருவோமுலே".. அட நம்ம மதுரை மொழி. தலை நிமிர்ந்து பார்த்தேன். என் முகத்தில் தான் தமிழ் என்பது எழுதி-இருக்குமே?.. அங்கு நான்கு தமிழ் இளைஞர்கள்.. என்னை பார்த்து கொண்டிருந்தனர். "என்ன தமிழா?" என்றேன். "ஆமாம் சார். மதுரை பக்கம்".. அதன் பிறகு அவர்கள்

 மட்டும் என்னோடு பேசி கொண்டிருந்தனர். நான் கேட்டு கொண்டிருந்தேன். மூவரில் மெத்த படித்தவன் ஒருவனே... பத்தாம் வகுப்பு பெயில்.... விருதுநகரில் இருந்து வந்திருந்தார்கள். மலேசியாவிற்கு  வேலைக்கு வந்தார்களாம் ஏஜெண்ட் மூலமாக. ஒரு பைசா பணம் இல்லாமல் விமானம் ஏறி இருந்தார்கள். 15 மணி நேரம்.. விமான நிலையத்தில் இருந்திருக்கிறார்கள்... ஒரு வேளை உணவு கூட இல்லாமல்.... "என்ன சார் இது?..ப்ளைட்- கொடுக்கிற சாப்பாட்டை எப்பிடி சார் சாப்பிடிரீங்க?.. விளங்கல*."
"அது அப்பிடித்தான் இருக்கும்." என்றேன். கொஞ்சம் இடைவெளி விட்டு, "ஏதாவது சாபிட்டிரீங்களா?" என்றேன். "வேண்டாம் சார். தாங்க்ஸ்" என்றார்கள். சிறிது நேரம் கழித்து ஒருவன் கேட்டான் "இங்க நம்ம ஊரு காச வாங்குவாங்களா?" என்றான்.சிரித்து கொண்டே "வாங்க போகலாம்" என்றேன். ஒரு காஃபீ ஷாப்பில் நுழைந்தோம். எனக்கு தெரியும் அவர்களால் என்ன சாப்பிட முடியும் என்பது. ஆளுக்கு ஒரு கேக்கும் காஃபீ-யும் வாங்கி கொண்டு அமர்ந்தோம். எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு நாள் அலவன்ஸ் ஒரே வேளையில் தீர்ந்தது. அவர்கள் சாப்பிடும் அவசரத்தில் அவர்களின் பசி தெரிந்தது. ஒரு மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டிருந்தேன். கடல் தாண்டி பிழைக்க வந்திருக்கும் அவர்களின் ஒரே நோக்கம் குடும்பம், அதன் முன்னேற்றம். எந்த குடும்பத்துக்காக உழைக்கிறார்களோ..அதை விட்டு பிரிந்து அதை காப்பாற்ற வேண்டிய சூழல். ஏஜெண்ட் நல்லவனாக இருந்தால், கையில் கொஞ்சமாவது பணம் கொடுத்து விட்டிருப்பான். முகம் தெரியாத அவன் மேல் கோபம் வந்தது. காஃபி குடித்தேன். "என்ன வேலைன்னு தெரியுமாப்பா?" என்றேன். "தெளிவா தெரியல சார்!. ஆனா கல் குவாரில வேலை போல". மனதுக்குள் மெலிதாக ஒரு சோகம்.
     "சரி வாங்க!. உங்க ப்ளைட் எங்க வரும்-னு சொல்றேன். இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு". அவர்களை அழைத்து கொண்டு நடந்தேன். பாதுகாப்பு சோதனை.. நான் கடந்து வந்து இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தேன். காணவில்லை. பாதுகாப்பு சோதனையில் ஏதோ குழப்பம் போல.. இவர்களை நிற்க வைத்து ஒரு அதிகாரி ஏதோ கேட்டு கொண்டிருந்தார். அவர்கள் அங்கிருந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் மறுபடியும் அங்கு சென்றேன். அவரிடம் என்ன பிரச்னை என்று விசாரித்தேன். தேங்காய் எண்ணை-யை பைக்குள் வைத்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதை கொண்டு செல்ல கூடாது என்று அதிகாரிகள் சொன்னது புரியாமல் இவர்கள்..மறுபடியும் எடுத்து பைக்குள் வைத்திருக்கிறார்கள். ஆகவே, இவர்களை அனுப்பாமல் விசாரித்து கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து இவர்களை கூட்டி கொண்டு நடந்தேன். "சார். அந்த தேங்காய் எண்ணை?" என்றான். சிரித்து கொண்டே சொன்னேன் "அது நல்லா வாசனையா இருக்காம். அதுனால அவுங்களுக்கு வேணுமாம்" என்றேன். அவர்களுக்கு அது நகைச்சுவை என்று கூட  புரியவில்லை. "லஞ்சமா சார்?" என்றான் ஒருவன். மூக்குடைபட்டாலும், காட்டிக்கொள்ள வில்லை.  பொறுமையாக அவர்களுக்கு விளக்கி கூறினேன். "ரொம்ப தாங்க்ஸ் சார். என்ன இருந்தாலும் தமிழ் அப்பிடின்னா உதவி பண்ணுவீங்க என்ன சார்" என்றார்கள். சிரித்து கொண்டேன்.
     அவர்கள் கூடவே அமர்ந்திருந்தேன். அதில் மூவர் புகை பிடிக்க சென்றார்கள். ஒருவன் மட்டும் என்னோடு இருந்தான். "சார்". ஏதோ கேட்க வேண்டும் என்று நினைக்கிறான் என்று புரிந்தது. "என்னப்பா. எதுவும் வாங்கணுமா?" என்றேன். "இல்ல சார். வந்து..." தயங்கினான். "ஒண்ணும் பிரச்னை இல்லப்பா. சொல்லு. என்ன?". என்றேன். அவன் குழப்பம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது வரை நான் கவனித்தில் இவன் கொஞ்சம் தைரியமானவனாக தெரிந்திருந்தான். "பயமா இருக்கு சார். இங்க எதுவுமே புரியலை. அங்க எப்பிடி இருக்கும் தெரியல. எங்கேயும் போய் மாட்டிப்போமோனு பயமா இருக்கு". அவன் கண்களில் லேசாக கண்ணீர் துளிர்ப்தை என்னால் பார்க்க முடிந்தது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. "இல்ல சார். இங்க அந்த போலீஸ் காரங்க கேட்கும்போது என்ன கேட்குறாங்க-னே புரியலை. ஒரு நிமிஷம் என்ன செய்றது-னு தெரியல சார். இங்க நீங்க இருந்தீங்க, வந்து பேசிடீங்க. வேற எங்கயும் இப்பிடி ஆச்சினா என்ன பண்றது சார். ரொம்ப பயமா இருக்கு சார். தங்கச்சியை கட்டி குடுக்க காசு சேர்க்க வந்திருக்கேன். என்ன ஆனாலும் திரும்பி போக முடியாது காசு இல்லாம. இப்பிடி ஏதாவது பிரச்னையாகி திரும்பி போகவே முடியாம போச்சுன்னா என்ன பண்றது?. ரொம்ப பயமா இருக்குச் சார்". எனக்கு அவன் பயத்துக்கான காரணம் புரிந்தது. மனதை ஏதோ செய்தது. "அப்பிடியல்லாம் ஒண்ணும் ஆகாது-ப்பா. பயப்பட வேண்டாம். அங்க நிறைய தமிழ் இருக்காங்க. ஒண்ணும் பயப்படாதே." எனக்கே நான் சொன்னதில் திருப்தி இல்லை. "சரி. நான் என்னோட நம்பர் தர்றேன். எதுவும் பிரச்னை-னா கால் பண்ணுங்க". அது எந்த விதத்தில் உதவும் என்பது எனக்கே தெரியவில்லை. ஆனாலும் அவனுடைய திருப்திக்காக, கொடுத்தேன். "ரொம்ப தாங்க்ஸ் சார். எங்க வீட்டில மட்டும் இல்ல சார் எங்க கிராமத்திலேயே கூட யாரும் இங்கிலீஷ் பேச தெரியாது சார். அதான்." அவனுக்கு திருப்தி வந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

   அவர்களும் வந்தார்கள். அவர்களின் விமானததுக்கான நேரம் நெருங்கியது. "சரி. பத்திரமா போய்ட்டு வாங்க. ஒரு வருஷம் ரெண்டு வருஷம் அங்க இருந்து நல்ல சம்பாதிச்சி நம்ம ஊருக்கு வந்து கடை மாதிரி ஏதாவது வச்சுகுங்க. ஒழுங்கா சேர்த்து வைக்கிற வழிய பாருங்க. போய்ட்டு வாங்க"..எனக்கு பொதுவாக அறிவுரை சொல்வது பிடிக்காது..என்றாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொன்னேன். "கண்டிப்பா சார். ரொம்ப தாங்க்ஸ் சார்"... என்னை விட்டு விலகி நடந்தார்கள். .

    சொந்த நாட்டில் வேலை இல்லாமல் வெளிநாடு போய் பிழைக்க வேண்டிய அவசியம் சுதந்திரம் வாங்கி ஐம்பது வருடம் ஆகியும் நம்மை விட்டு நீங்கவில்லை. இலவச அடிப்படை கல்விக்கு பணம் செலவழிக்க முடியாத அரசாங்கம் ஆயுதங்களுக்காக ஆயிரம் கோடிகளை செலவழித்துகொண்டிருக்கிறது. இதை பற்றி கேட்டால் தேச பற்று இல்லாதவனாகி விடுவேன். மறுபடியும் தண்ணீர் குடிப்பதற்கான அவசியம் வந்து விட்டது.

    என்னுடைய விமானத்தில் ஏறும் நேரம் வந்ததும் அழைத்தார்கள். ஏறி அமர்ந்தேன். மனைவியை ஏற்கனவே சென்னைக்கு வர சொல்லியிருந்தேன். அவளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லையாம் மறுநாள் வருவதாக சொல்லி இருந்தாள். ஒரு நாள் முழு பொழுது கழிய வேண்டும். சிவா-வை வர சொன்னால் வருவான். சிவா என்னுடன் படித்தவன். நண்பன். அதற்கும் மேல்... சென்னை இறங்கியவுடன்  அவனை அழைக்க வேண்டும். 
       பயணம் இனிதே முடிந்தது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன்... ஒரு குரல் ".டேய் நல்லா இருக்கியா?". பழகிய சிவாவின் குரல். அவன்தான். என்னை அழைப்பதற்காக விமான நிலையத்துக்கே வந்திருந்தான். மகழ்ச்சியாக இருந்தது. வழக்கம்போல் பேச ஆரம்பித்தோம். . வீட்டில் உணவு உட்பட வேண்டிய எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திருந்தான். ஆகவே ஆரம்பித்தோம். அவனுக்கு என்னிடம் சொல்ல வேண்டியது நிறைய இருந்தது. இரு வாரங்கள்தான் என்றாலும் ஒவ்வொரு தினத்திலும் நடந்ததை சொல்ல வேண்டி இருந்தது அவனுக்கு. நான் என்னுடைய பாங்காக் விமான நிலைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். பேசி கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. மணி காலை ஏழு. "சரிடா. நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வர்றேன்" என்று கிளம்பினான். அவனை அனுப்பி விட்டு..அமைதியாக சிறுது நேரம் அமர்ந்திருந்தேன். ஒரு நடை வெளியில் சென்றால் நன்றாக இருக்கும்போல் தோன்றியது. நடக்க ஆரம்பித்தேன். இரவு மனைவியை கூப்பிட ரயில் நிலையம் செல்ல வேண்டும். குழந்தை பாரதி-யை பார்க்க ஆவலாக இருந்தேன். என்னுடைய செல்போன் அலறியது. மனைவியாகத்தான் இருக்கும்.....
                                       புதிய எண்.. வெளிநாட்டு எண் போல தெரிந்தது. ஒருவேளை நான் பார்த்த வேலை விஷயமாக இருக்கும். "ஹலோ" என்றேன். "சார்! நல்லா இருக்கீங்களா? நான்தான் சார் மாணிக்கம். பாங்காக்-ல் பார்த்தோமே?.." அந்த மதுரை இளைஞர்கள். "ம்.. நல்லா இருக்கேன். நீங்க என்ன செய்றீங்க? ". "நாங்க மலசியா வந்துடோம் சார். அதான் உங்களுக்கு கால் பண்ணி சொல்லிருலாம். அப்பிடின்னு. ரொம்ப தாங்க்ஸ் சார்".. . "சரிப்பா. உடம்பை பாத்துக்கொங்க. பத்திரமா இருங்க. சரியா?.. என்றேன். "சரி சார். நான் வச்சிட்ரேன்.".. நெகிழ்வாக இருந்தது. இவர்களுக்கு என்ன செய்து விட்டேன். மலேசியா-வில் இருந்து போன் செய்து சொன்னது மகிழ்ச்சியாயிருந்தது. அவர்கள் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்ற பயமும் கூடவே வந்தது. அவர்களின் குடும்ப சூழ்நிலையும் நினைவுக்கு வந்தது. காந்தி "கிராமங்களை முதுகெலும்பு" என்றார். நமக்குத்தான் முதுகெலும்பு-வை விட முகத்துக்கு போடும் அழகு பொருளும், காலுக்கு போதும் செருப்பும் தானே முக்கியம். பாலங்கள் கட்டுவதையும், பாதுகாப்புக்கு
செலவிடுவதையும் சொல்கிறேன். செய்திதாள் பார்த்தேன். நீண்ட நாள் ஆயிற்று.. படித்தே.. ""பிரதமர் அமெரிக்கா பயணம். ஆயுத பகிர்வு ஒப்பந்தம் கையெழுதிடுக்கிறார்"". எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. பழசாறு குடிக்கலாம் என்று முடிவு செய்து. அருகிலிருந்த கடைக்கு சென்றேன். "ஒரு எலுமிச்சை ஜூஸ் குடுங்க". கடைக்காரர் நிரம்ப பேசுவார் போல தெரிந்தது. எதிர்பார்த்தது போலே ஆரம்பித்தார். "சார் நேத்து மாட்ச் பார்த்தீங்களா. பின்னி எடுத்தாங்க சார் நம்ம பசங்க. பாகிஸ்தான் இனிமேல் மாட்ச் பத்தி நினைச்சு கூட பாக்கமாட்டாங்க". அவர் மகிழ்ச்சியாகத்தான் சொன்னார். என்னால் முடியவில்லை. "அண்ணே, ரெண்டா போடுங்க. அதுவும் பார்சல்". அவசரமாக சொன்னேன். அவர் சிரித்து கொண்டே "தம்பி. ஹை லைட்ஸ் பார்க்க ஓடுரீங்க போல". எனக்கு அதில் எதுவும் நகைச்சுவை இருப்பதாக படவில்லை. மையமாக சிரித்தேன். அவர் கொடுத்தவுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
மறுபடியும் செல் போன் அழைததது. இன்னொரு நண்பன் சுந்தர். நான் வந்தது இவனுக்கு யார் சொல்லி தெரியும் என்று யோசித்து கொண்டே எடுத்தேன். நீண்ட நாள் கழித்து பேசுவதால் எப்படியும் நிறைய விசாரிப்பான். "சொல்றா சுந்தர். எப்பிடி இருக்கே? " என்றேன் முந்தி கொள்வதாக நினைத்து. அவன் அதை காதில் வாங்கிய மாதிரி தெரியவில்லை. "டேய். நேத்து மாட்ச் பார்த்தியா? என்ன மாதிரி ஒரு மாட்ச்டா...! ". நான் சாலையிலேயே பழச்சாறு குடிக்க ஆரம்பித்தேன்.
----- காளிராஜ்



3 comments:

  1. Ungaludaya adutha parimanathaiyum rasigiren.......Vazthukal

    Shanmugam

    ReplyDelete
  2. Kali.. veetla ungalai sankar'nu thaan kupiduvangala? ;)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களுக்கு!!