Sunday, 3 February 2013

விஸ்வரூபம்!

என்னுடைய முதல் சினிமா பற்றிய கட்டுரைக்கு பல்வேறு கற்பனைகள் (யாரை பற்றி, எதை பற்றி என்று பற்பல) செய்து வைத்திருந்தேன். இதுவாக இருக்க வேண்டும் என்று என் கனவிலும் நினைக்கவில்லை. இரண்டு மூன்று நாட்களாக தூக்கத்திலும் இதை பற்றிய நினைவுதான். ஒரு மாதிரியான நிம்மதியின்மை!

என் பிறந்த ஊரிலோ, நான் வளர்ந்த இடத்திலோ நான் இஸ்லாமியர்களுடன் நெருங்கி  பழகும் வாய்ப்பு பெரும்பாலும் இல்லாதவன். குறிப்பாக சொல்வதானால் இரண்டு நண்பர்கள் மட்டும்தான். ஒருவன் சபீர். என்னுடன் கல்லூரியில் படித்தவன். மற்றொருவன் ரஹ்மான். நான் முன்பு இருந்த அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்தவன். எவ்வளவு யோசித்தாலும் வேறு நபர்களை பெயர் ஞாபகத்தில் இல்லை.

சபீர், நாங்கள் படிக்கும்போது எங்கள் வகுப்பில் மாணவர் தலைவனாக இருந்தான். சொல்வதற்கு எந்த வெட்கமும் இல்லை, அப்பொழுதெல்லாம் நான் ஒரு வகையான இந்துத்வாவாதி. என்ன காரணம் என்று தெரியவில்லை...சபீருடன் பழக எனக்கு எந்த தடையும் இல்லை. ஆனாலும் நான் மதத்தில்...மதத்தில் என்பதை விட..மத அரசியலில் தீவிரமாகவே இருந்தேன். சபீரிடம் எங்கள் வயதிற்கு மீறிய ஆளுமை திறன் இருந்தது. எங்கள் வகுப்பில் நாங்கள் பல சிறு குழுக்களாகவே இருந்தோம். சிற்சில சண்டைகளும், ஒரு பெரிய சண்டையும் கூட உண்டு. ஆனால் சபீர் எங்கள் எல்லோருக்கும் பொதுவான ஒருவனாக இருந்தான். கடைசி வரை. சபீர் சொன்ன கேட்க மாட்டான் என்று ஒருவன் கூட என் வகுப்பில் அப்போது இல்லை. இப்போது கூட எனக்கு ஆச்சர்யம் தரும் விசயம்தான். சபீருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. அவனுடைய அதிக பட்ச கெட்ட வார்த்தை 'லூசு' என்பது மட்டும்தான். நானும், சிவாவும், இசக்கியும் (அப்புறம் கிரி என்ற இந்த விசயத்தில் என் மாணவனாகும் வரம் பெற்றவன்...:) ) பேசும் வார்த்தைகளுக்கு முன்னால் அந்த லூசு என்ற வார்த்தை பெரிய வாழ்த்துரையாக இருந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

ஒரு முறை டூர் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். எல்லோரையும் அழைத்து செல்ல நிறையவே மெனகட்டான். நானும் சிவாவும் வரமுடியாது என்று சொல்லிவிட்டோம். நிறைய சுற்று பேச்சு வார்த்தை நடத்தினான். ஒன்றும் முடியவில்லை. ஒரு நாள் நான் தனியாக இருக்கும்போது, பேசி பார்த்தான். நான் முடியாது என்றே சொல்லி கொண்டிருந்தேன். கடைசியில், இன்னொரு முறை நான் டூர் ஏற்பாடு செய்தான் என்னை செருப்பால் அடிங்கடா என்று அவனுக்கு உரிய உச்சகட்ட கோபத்தில் கூறினான். அப்போதுதான் உள்ளே நுழைந்த சிவா, சீரியஸாக, "காளி இந்த டூர் போகும்போது அதை வாங்கிட்டு வர சொல்லி சபீர் கிட்ட சொல்லிட்டியா?" என்றான். சபீர், "எதைடா?". "ம்ம்..அதான் சொன்னியே, செருப்பு"..எல்லோரும் சிரித்து கொண்டே இருந்தோம்.

சபீர் எனக்கு ஆதர்ஷம், எப்போதுமே...மனிதர்களை சம்பாதிப்பதில்.

 என்னை அவன் இந்த நாள் வரை பாதித்து கொண்டிருப்பதற்கு காரணமான நிகழ்ச்சி வேறொரு நாளில் நடந்தது. முந்தின நாள் டிவியில் சின்னத்தாயி என்ற படம் வந்திருந்தது. சபீர் ஒரு வகையான உணர்ச்சிவயப் பட்ட நினையிலேயே அன்று முழுவதும் இருந்தான்.கோட்டையை விட்டு என்ற பாடல் அவனுக்குள் திரும்ப திரும்ப ரீங்காரமிட்டு கொண்டிருப்பதை அவன் பேசும்போது என்னால் உணர முடிந்தது. "அந்த பாட்டு என்னோமோ பண்ணுதுலே!. எங்க ஊருல எடுத்த படமுல்ல..!". பொதுவாகவே என் பார்வையில்,திருநெல்வேலி காரர்கள் மற்ற எந்த ஊர் காரர்களை விடவும் ஊரோடு பிணைக்க பட்டவர்கள்.தாமிரபரணி தண்ணீர் குடித்தவன் என்பதை கூட பெருமையோடு சொல்வார்கள். அதற்கு முந்திய என் நினைவு முழுதும் இஸ்லாம் இனத்தோர் இந்த எண்ணம் எல்லாம் இல்லாதவர்கள் என்பதாகவே இருந்தது. சபீர்தான் முதலில் அதை உடைத்து போட்டவன். இஸ்லாம் வேண்டுமானால் இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் தேர்ந்தெடுத்த மார்கமாக இருக்கலாம். ஆனால் சபீரின் முன்னோர்களும், என்னுடைய முன்னோர்களும் எப்படி இருந்திருப்பார்கள். என்ன வகையான உறவு அவர்களுக்குள் இருந்திருக்கும்?. கற்பனை விரிந்து கொண்டே சென்றதில்,  நான் அதுவரை நினைத்திருந்த விசயத்தின் நேர் எதிரில் நின்று கொண்டிருந்தேன். சபீரின் முன்னோர்களும் என் முன்னோர்களும் உறவினர்களாக இருந்திருக்க கூடிய வாய்ப்பு என்னை மிகவும் பாதித்தது!

இப்போது யோசிக்கையில், அவனுடைய நம்பிக்கையின் படி அவன் ஆதாமின் வாரிசாக இருந்தால், நானும் அப்படிதானே?. என்னுடைய புரிதல் படி, குரங்கிலிருந்து என்றால்  அவனும்தானே தானே?. அப்போது மார்க்கம் என்பது கல்லூரியில் நாம் எடுத்த பாடபிரிவு போலத்தானா?.

சபீரை கல்லூரிக்கு பிறகு நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். இந்த பத்து வருடங்களில் அவ்வளவுதான். அவன் நான் அதன் பிறகு பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிமிலும் அவன் இருந்தான். சபீர் இப்போ இந்த மாதிரி தாடி வைத்திருப்பானா?. என்பது போன்ற எண்ணங்கள் எந்த முஸ்லிமை பார்த்தாலும். ஆம்! எனக்கு சபீர்தான் அளவுகோல் எந்த இஸ்லாமியரையும் அளப்பதற்கு.

கல்லூரிக்கும் பிறகு நான் அடைந்த பரிமாண மாற்றங்கள் எதுவும் சபீருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு நான் எப்போதும் நெற்றியில் பட்டை போட்டுகொண்டு பரீட்சை எழுத வரும் காளியாகவே இன்னும் தோன்றி கொண்டு இருக்கலாம். அந்த நேரத்திலேயே சபீர் எனக்கு நெருக்கமானவன் என்றால், இப்போது அது பன்மடங்கு கூடி உள்ளது!


இந்த கட்டுரை எழுத காரணம்..நான் செய்த ஒரு சிறிய தவறு. விஸ்வரூபம் பிரச்சனையில் ஆரம்பம் முதலே எனக்கு அரசின் மீதுதான் விமர்சனம். எனக்கு தெரிந்த நண்பர்களிடமும் நான் அதையே சொல்லி வந்தேன். போராடுவது ஜனநாயக உரிமை. படத்தை தடை செய்யும் முன், சமரசத்தில் ஈடு பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. ஒவ்வொரு படத்திற்கும் இப்படி செய்ய முடியுமா? என்றால்..ஆம்! சட்டம் ஒழுங்கு கெடும் என்று ஒவ்வொரு படத்திற்கும் தடை விதிக்க முடியும் என்றால் இதுவும் முடியும்.

நான் செய்த தவறையும் கூறிவிடுகிறேன். இஸ்லாமியர்களின் தரப்பில் வைக்கப்படும் வாதங்களை தெரிந்து கொள்ள தேடி கொண்டிருந்த போது..ஜைனுலாப்தீன் என்பவரின் மேடை பேச்சை பார்க்கும் மோசமான தருணம் வந்தது. எனக்கு அவர் எவ்வளவு தூரம் செல்வாக்கு மிக்கவர் என்பதெல்லாம் இப்பவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்ப வில்லை. என்னுடைய பதினாறாம் வயதில் எங்கள் ஊரில் சண்முகையா பாண்டியன் என்று ஒருவர் பேசுவார். அவர் பேச்சு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே பாதிப்புதான் இன்றும் ஏற்பட்டது. அந்த வீடியோவை பார்த்துவிட்டு இரு நாட்களாக என் மனைவிடம் புலம்பி கொண்டே இருந்தேன்!

ஜைனுலாப்தீன் பேசிய பேச்சில் எனக்கு தட்டுபட்ட சில நியாயமான விசயங்களும் அதற்க்கான என்னுடைய புரிதல்களும் முதலில்..

1. இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் இஸ்லாமியர்களை உள்ளது உள்ளபடி காட்டியதே இல்லை. சாம்பிராணி புகை போடுகிறவர், நிம்மல்கிட்ட, நம்மல்கிட்ட என்று தவறாக தமிழ் பேசுபவர், மீசை இல்லாமல் தாடி வைத்திருப்பவர், இப்போதெல்லாம் தீவிரவாதி.. இப்படி மட்டுமே இஸ்லாமிய சமூகம் தமிழ் சினிமாவில் சித்தரிக்கபடுகிறது! ஜைனுலாப்தீன் எம்.ஜி.ஆர் முதல் வடிவேலு வரை எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லி இருப்பார்.

என்னை பொறுத்தவரை இது மிக நியாயமான ஆதங்கம். விஸ்வரூபம் தடைக்காக கமலுக்கு ஆதரவாக திரண்டு வந்த திரை உலகமும் அதன் படைப்பாளிகளும் வெட்கப்படவேண்டிய செய்தி இது. ஒரு சமூகத்தை பற்றி அந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல், பொத்தாம் பொதுவில் சித்தரிப்பதால் அவர்கள் படும் வேதனை பற்றி கொஞ்சமும் கவலைபடாத படைப்பாளிகள் இதற்காக வருத்த பட்டே ஆகவேண்டும். அதில் முற்போக்கு, நல்ல சினிமா பற்றி பேசும் அனைவரும் அடக்கம்.

ஜைனுலாப்தீன் மற்றும் அவர் போல சிந்திக்கும் மற்ற தோழர்களுக்கு என் பதில்: இவ்வகையான கேவலமான சித்தரிப்புக்கு காரணம் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு என்ற புரிதலில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது தமிழ் சினிமாவின் சாபகேட்டில் ஒன்று என்பதே என் எண்ணம். காலகாலமாக தமிழ் சினிமா இப்படிப்பட்ட கற்பிதங்கள் மீதே கட்டமைக்க பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்களை, காவல்துறையினரை, பிராமணரை, பெண்களை, திருநங்கைகளை..எல்லோரையும் தமிழ் சினிமா இப்படிதான் சித்தரித்து வந்துள்ளது. நேர்மையான சினிமா என்பதில் ஆர்வம் இல்லாத படைப்பாளிகளால் வந்த பிரச்சனை இது. இது சினிமாவை நேசிக்க கூடிய, நல்ல சினிமா வர வேண்டும் என்று நினைக்க கூடிய அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய விஷயம் இது. மதத்தின் பெயரால் உங்களை தனிமை படுத்தி கொண்டு போராட வேண்டிய அவசியம் இல்லை. நல்ல சினிமாவை ஒரு இயக்கமாக கொண்டு செல்லும் திறன் படைத்தோருடன் கைகோர்த்து செய்ய வேண்டிய காரியம் இது என்பதே என் உறுதியான கருத்து.

மற்றபடி, எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ, கமலோ, ரஜினியோ, உங்களை கீழ்மைப் படுத்த வேண்டும் என்பதற்காக செய்யும் வேலை அல்ல இது. தமிழ் சினிமா அத்தகைய கீழ் எண்ணம் படைத்தவர் வசம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

2.கருத்து சுதந்திரம் என்ற வார்த்தையை உபயோகபடுத்தும் தகுதி, பாபா படபெட்டியை தூக்கி கொண்டு ஓடிய ராமதாஸ் வழிவந்தவர்கள், குமுதம் பத்திரிகையை எதிர்த்த பாரதிராஜா, வாட்டர் படத்தை எதிர்த்த சங்பரிவார், டேம் படத்தை தடுத்த 'முற்போக்கு' தமிழ் சமூகத்திற்கு இல்லை.

என் பதில்: அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் இவையெல்லாம் தவறு என்று சொல்லிய .. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நடுநிலையாளர்கள் பலர் எல்லா இடத்திலும் உண்டு. அவர்களுக்கு உண்டு இல்லையா?. அவர்களுக்கு உங்கள் பதில்? அவர்கள் எல்லோரும் செய்தார்கள் ஆகவே நாங்களும் செய்வோம் என்பது நல்ல பதிலாக எனக்கு படவில்லை. என்னை பொறுத்தவரை கருத்து சுதந்திரம் என்பது..இவைகளை பற்றி கூறக்கூடாது என்பது போன்ற கட்டுபாடுகளை உடையது அல்ல. பெருவாரியான மக்கள் சமூகத்தில் எந்த கருத்துகளையும் முன் வைக்கலாம். அவற்றின் ஏற்று கொள்வதும் கொள்ளாமல் இருப்பதும்..அவரவர் விருப்பம். எதிர்பதற்க்கும் கருத்து சுதந்திரம் உடைய சமூகத்தை நோக்கியே நம் பயணம் இருக்கவேண்டும். சொல்லவே கூடாது என்பதற்க்கான போராட்டம் நாளை எந்த வகையான சமூக போராட்டத்தையும் அழித்து விடும்.

3. பாரதிராஜாவின் "தீவிரவாதத்திற்கு எதிரான படத்தை எதிர்த்து தங்களை தீவிரவாதியாக காட்டிக்கொள்ள வேண்டாம்". என்ற வேண்டுகோளின் தொனி.

இது கண்டிப்புக்கு உரியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. வழக்கம்போல் மூளை கொண்டு சிந்திகாமல் உளறி இருக்கிறார். சிறு பொறுப்புணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். அவர் படம் பார்த்துவிட்டு அப்படி சொன்னாரா என்பது கூட எனக்கு தெரியவில்லை. நேர்மையான நோக்கத்துடன்  படம் எடுத்த யாரையும் நான் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்தது இல்லை. விஸ்வரூபம் படத்திற்கு நான் அல்லது என் போன்றோர் ஆதரவு தருவது அவர் அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டார் என்ற அபத்தமான நம்பிக்கையின் பேரில் அல்ல. அப்படி கூறி இருந்தாலும் அதுவும் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதியே, என்பதும்..அதற்க்கு எதிராக நாம் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுதான் என் நிலை.


இதைதவிர எனக்கு அந்த பேச்சுக்களில் வேறு நியாயங்கள் இருந்ததாக படவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் எனக்கு கவலை ஏற்படுத்தும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். ஒட்டுமொத்த இந்திய அல்லது தமிழ் சமூகமும் இஸ்லாமிய சமூகத்திற்கு நேர் எதிரில் இருப்பது போன்ற ஒரு நிலையை ஜைனுலாப்தீன் நிறுவ முயற்சித்திருப்பது என்னை மிகவும் கவலையுற செய்கிறது. நம் சமூகம் அப்படிப்பட்டது அல்ல நண்பர்களே! ஒரே ஒரு கேள்வியை மட்டும் அந்த எண்ணம் உடையவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டால் அது விளங்கும்.

பெரியார்..எல்லோருக்கும் நாத்திகவாதியாக அறிமுகமான அவர்..! பெருவாரியான மக்கள் ஏற்றுகொண்ட கடவுள் சிலையை தன் பக்கத்தில் இருத்தி கொண்டு..அதை செருப்பால் அடித்து கொண்டு சைக்கிள் ரிக்சாவில் ஈரோட்டை சுற்றி வரும் தைரியம் படைத்த அவர்..தன வாழ்நாளில் ஒரு முறை கூட..சிறுபான்மையினரின் தெய்வத்தை பற்றியோ, அவர்கள் வழிபாட்டை பற்றியோ..ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இதே நிலையை நான் மதிக்கும் பல கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் ஏற்று கொண்டே வந்துள்ளனர். இது ஏன் என்று சிறிது யோசித்தால் நம் சமூகம் எப்படிப்பட்ட சமூகம் என்று விளங்கும்.பெரியாருக்கு..இந்து கடவுள் மேல் மட்டும் அல்ல..எந்த கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனாலும் அவர் அதை பற்றி விமர்சிக்காதற்க்கு காரணம் பயம் அல்ல...கண்ணியம்! அந்த கண்ணியத்தோடு அவர் வழியும், கம்யூனிஸ்ட் தோழர்கள் வழியும் வந்த கோடானுகோடி இந்துக்கள் உள்ள தேசம் இது. மோடி வழிவந்தவர்களுக்கு மட்டும் உண்டான தேசம் அல்ல இது!

பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் அழுத..புலம்பின கோடானுகோடி மக்கள் உள்ள தேசம் இது! காந்தியை சுட்டவர்கள் மட்டும் உள்ள தேசம் அல்ல இது..!

மோடிக்கு மட்டுமல்ல..காயிதே மில்லதுக்கு ஓட்டளித்த சமூகமும் இதுதான்.

இன்றும் இது மாறிவிட்டாதாக எனக்கு படவில்லை.

உண்மையை சொல்லப்போனால்..பல்வேறு தளங்களில், பல்வேறு சூழ்நிலைகளில்..இஸ்லாமியர் மட்டுமல்ல..எல்லா மதத்தினரின் வழிபாட்டு உரிமைக்கும்..அவர்களை வாழ்வுரிமைக்கும் போராடிய கோடானுகோடி நடுநிலையாளர்களின் முகத்தில் கரிபூசி இருக்கிறது இந்த விஸ்வரூபம் விஷயம்."இப்போ என்னங்கடா சொல்றீங்க!" என்ற பாசிச ஓநாய்களின் கேள்விகளுக்கு எங்களை போன்றோரால் பதிலளிக்க முடியாத நிலை இதனால் ஏற்பட்டு இருக்கிறது!

 இவ்வளவு பதில்களும் ஜைனுலாப்தீன் மற்றும் அவர் பேச்சிற்க்கு கைதட்டிய ஒரு சிறு கூட்டத்திற்கும் மட்டுமே தவிர எல்லா தோழர்களுக்கும் கிடையாது! ஆனால் எப்படி..சண்முகையா பாண்டியன் காணாமல் போனாரோ..அப்படியே இவரும் காணாமல் போவது சமூகத்திற்கு நல்லது! அம்மையாரின் அரசியலில் சிக்கிய அல்லது சிக்கவைக்க முயற்சிக்கும் கூட்டத்தினருடன் நாம் கவனமாகவே இருக்க வேண்டியுள்ளது. என் போன்றோர் எதிர்க்கும் இந்துத்வா அரசியலுக்கும், இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை..!

எப்படி இந்துக்களில்..நான் குறிப்பிட்டது போல சங்கபரிவார் இல்லாத மக்கள் உள்ளனரோ..அப்படியே இஸ்லாமியர்களிலும் இருக்கிறது என்ற நிலையை நாம் எடுத்துக்காட்டியே ஆகவேண்டும்! அல்லது நம் பொதுமன புத்தி..அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதிகளாக்கி..அவர்களை வெறுக்கும் நிலையை மிக எளிதாக கொண்டுவந்து விடும். அரசியல் சார்பற்ற..இஸ்லாமியர் அமைப்புகளை நிறுவியாக வேண்டிய கட்டாயம் இப்போது அனைவருக்கும் உள்ளது!

சபீர் எனக்கு எப்படியோ அப்படிதான்..எனக்கு நம் ஊரில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும். பக்கத்து மாநிலத்தில் உள்ள இந்துக்களை காட்டிலும், தமிழ் இஸ்லாமியர்கள் மொழியால், முன்னோர்களால் எனக்கு நெருக்கமானவர்கள். ஜெனெடிக் சோதனை செய்தாலும் இந்த உண்மையே சான்றாகும்! நான் எப்படி எல்லா இஸ்லாமியர்களின் ஊடாகவும் என்னுடைய சபீரை தேடுகிறேனோ..அப்படியே..சபீரும் மற்றோர்களும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்!ஸ்ருதி அப்பாவுடன் இணைந்து நடிக்க வேண்டும்...என்பதை அபத்தமாக புரிந்து கொண்டு ஜைனுலாப்தீன் சொன்னது போன்ற வெறுப்பின் ஊடாகவும்  அல்ல...பாரதிராஜாவின் உடன்பிறந்த சகோதிரிகள், அவரின் மனைவி ஆகியோரின் பத்தினித்தனம் குறித்த ஆராய்ச்சி வழியாகவும் இல்லை. மக்களிடம் அழகானதையே பேசுங்கள் என்ற வாசகம் எல்லோருக்குமானது.

நாம் என்ன செய்திருக்கலாம்??..

விஸ்வரூபம் படத்திற்கு எதிராக போராடி இருக்கலாம்..நாம் எல்லோரும் இணைந்தே! ஜனநாயக ரீதியாக நம் எதிர்ப்பை நாம் பதிவு  செய்திருக்கலாம். ராமதாஸ், பாரதிராஜா செய்தார்கள் என்பதற்காக இப்போது நாம் செய்ததும் நியாயம் ஆகாது! படத்திற்கு எதிராக ஆர்பாட்டம் நிகழ்த்தி இருக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும். சிறு அறிக்கைகள் (மேற்கொண்ட நியாங்களை விளக்குவதாக), துண்டு பிரசுரங்கள் விநியோகித்து இருக்கலாம். இதுதான் ஜனநாயகத்தின் வழி. இவ்வகையான அனைத்து போராட்டங்களுக்கும் நாம் மாதிரியாக இருந்து இருக்கலாம். தனிமை படுத்தி கொண்டு போராட வேண்டிய துர்பாக்கிய நிலை இன்னமும் இந்த நாட்டில் எந்த இனத்திற்கும் ஏற்படவில்லை. உங்கள் போராட்டம் இவ்வகையில் இருந்தால்..நடுநிலையாளர்களின் ஆதரவை எளிதாக பெற்று இருக்கலாம். கூடங்குளம் போராட்டம் போல் நீங்கள் தனித்து விடபட்டிருந்தாலும்..எதிர்காலத்தில்ஒரு சிறு தயக்கத்தையும், குற்றவுணர்வையும் படைப்பாளிகளிடம் நாம் ஏற்படுத்தி இருக்கலாம். இப்போதும் அந்த தயக்கம் ஏற்பட்டு இருக்கிறது..ஆனால் இது எதிர்மறையானது. தீண்டதாகதவர்கள் போல் ஆக்க பட்டு இருக்கிறோம். எதுக்கு  வம்பு என்றே ஒதுங்கி இருப்பார்களே தவிர உங்களை புரிந்து கொண்டு அல்ல. அவர்களின் முறைக்காக கறுவி கொண்டு இருப்பார்களே தவிர..உங்கள் நியாயத்திற்கு செவி சாய்த்து அல்ல!. நாம் பொறுமையுடன் இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து! 

இது என்னை வேறு ஒருவனாக கற்பனை செய்து கொண்டு இஸ்லாமிய சமூகத்தை நோக்கி கூறும் அறிவுரை அல்ல. சக மனிதர்களுக்கு அவர்களின் ஒருவனாக, சகோதரனாக இருக்க விரும்பும் நேசத்துடன் சொல்வது!

1 comment:

  1. நிறைவான கட்டுரை. உங்கள் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் காளி, வாழ்த்துகள் !

    ReplyDelete

உங்கள் கருத்துக்களுக்கு!!