சென்ற வாரம் பாரதியின் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்றிருந்தேன். உள்ளே நுழைந்ததுதான் தாமதம்..எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு சிறுமி பாரதியை கட்டிக்கொண்டது. அவள் பெயரும் பாரதிதான். திவ்யபாரதி.அவள் பெற்றோரை பார்க்க ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் அந்த கவிஞனின் பெயர் வைத்ததற்க்காவது!. அதற்குள் ஆசிரியர் அழைத்ததால் செல்ல வேண்டிய கட்டாயம். எனவே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சென்று விட்டேன். பார்க்காமலே வந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஆசிரியரை பார்த்து விட்டு வந்தோம். திவ்யபாரதியின் பெற்றோரை தேடினோம். ஓர் ஓரமாக அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கு 'என் இனமடா நீ" என்பது போல் இருந்தார்கள் (அட கலரை சொல்றேங்க!!). பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பின் நான் எதிர்பார்க்காதபடி நேரடியாக விசயத்திற்கு வந்தார். "பாப்பா! சொன்னா சார். பாரதியை தமிழ் படிக்க வச்சிருக்கீங்க போல. ஏன் சார்?" என்றார். "ஞே.." என்று விழிப்பதற்கு அர்த்தம அப்போதுதான் விளங்கியது. விழித்தேன். "வந்து சார்...ஸ்கூல்-ல விசாரிச்சேன். இங்கிலீஷ் தவிர ஒரு லாங்குவேஜ் தான் படிக்க முடியும்னு சொன்னாங்க..அதான் சார்!" என்றேன் தெளிவான பதில் கண்டு பிடித்ததாக நினைத்து கொண்டு. "அது சரி சார். ஹிந்தி படிக்க வச்சிருக்கலாம் இல்ல?. தமிழ் படிச்சி என்ன யூஸ்?. அதான் நம்ம வீட்டில பேசுறோம் இல்ல?. நான் பாருங்க, அதுனாலதான்ஹிந்தி படிக்க வச்சிருக்கேன். கொஞ்ச நாளைக்கு கஷ்டமா இருக்கும். அப்புறம் பழகிடும். நீங்க அந்த கொஞ்ச நாள் கஷ்டத்திற்கு பயந்து தமிழ் எடுதிருக்கீங்கன்னு நினைக்கிறேன். நான் சொல்றேன் கேளுங்க சார். கொஞ்ச நாள் கஷ்டத்தை பார்த்தீங்கன்ன குழந்தை லைப் பாழா போய்டும். தமிழ் படிச்சி ஒண்ணும் ஆகப்போறது இல்ல, பேசாம நீங்க உடனே ஹிந்திக்கு மாத்துங்க!. நீங்களும் சொல்லுங்க மேடம்!" என்று மூச்சு விடாமல் பேசிவிட்டு தண்ணீர் குடித்தார். "நான் யோசிக்கிறேன் சார்!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். இரவு நானும் ப்ரியாவும் அமர்ந்து பேசினோம். தமிழ் படிப்பதால் உபயோகம் இல்லை என்பதால் அதை விட்டுவிடலாம். வேறு எதை எதையெல்லாம் உபயோகம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசித்து கொண்டு பட்டியல் இட்டு கொண்டிருந்தோம். எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் அந்த பட்டியலில் உள்ள சில இங்கே!! * கண்டிப்பாக நம்மக்கு குஷன் படுக்கை தேவையா?.கீழே படுத்தால் கூட தூக்கம் வரும். ஆகவே அது யூஸ் இல்லை. * கண்டிப்பாக ஒவ்வொரு வாரமும் அசைவம் தேவையா?.. அது அப்படி ஒன்றும் யூஸ் இல்லை. .... பட்டியல் மிக நீளம். ஆகவே இந்த உரையாடல் முடிவுக்கு வந்த அந்த கடைசி மூன்று யூஸ்லெஸ் விஷயங்கள் மட்டும் இங்கே. * பாரதியை வளர்ப்பதுதான் அடுத்து எங்களுக்கு முன் வந்த எண்ணம. பாரதியை வளர்பதால் எங்களுக்கு என்ன யூஸ்?. அவள் எங்கள் வயதான காலத்தில் பார்ப்பாள் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை, ப்ரியாவுக்கும் இல்லை. வேறு எதற்கு நாங்கள் அவளை வளர்க்க வேண்டும். * இது முடிந்ததும். நான் ப்ரியாவிடம் கேட்ட கேள்வி இதுதான். "உனக்கு நான் எதற்கு சோறு போடவேண்டும்? எனக்கு என்ன யூஸ்?". அவளும் நேர்மையாக யோசித்து விட்டு. "ஒண்ணும் இல்லீங்க" என்றாள். அதுவும் முடிந்தது. * பிரியா உடனே கேட்டாள். "நீங்க எதுக்கு உயிர் வாழனும்?". அட இது நல்ல கேள்வியாக பட்டது. இதற்க்கு நான் பல காரணங்களை சொல்லி பார்த்தேன். எதுவும் ப்ரியாவை திருப்தி படுத்தவில்லை. ஒரு முறை "பகிர்தல் இன்பம்" பகுதியில் எழுதி சமூகத்திற்கு சேவை செய்ய! என்று கூட சொல்லிப்பார்த்தேன். அவள் உடனே உண்மையை சொல்லிவிட்டாள். "அது ஒண்ணுக்காகவே நீங்க உயிரோட இருக்கக்கூடாது அப்டின்னு படிக்கிறவங்க நினைப்பாங்க". யோசித்து பார்த்தேன்.(யாருடைய விளக்கமமும் இந்த விசயத்தில் தேவை இல்லை. ஆகவே உள்ளீடு அளிப்பதை தவிர்க்கவும். உண்மை எப்பொதும் கசக்கும்!). உண்மைதான் என்று தோன்றியது. ஆகவே வாழ்வதும் யூஸ் இல்லை என்று முடிவுக்கு வந்தேன். இதற்க்கு மேலும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.... இதை படிக்கும் உங்கள் வாழ்வு கூட கேள்வி கேட்கப்படும். ஆகவே நீங்களே மீதத்தை புரிந்து கொள்ளுங்கள்!!. என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த அவருக்கு நன்றி!! -- கண்டிப்பாக இந்த தளத்தை அவர் படிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் காளிராஜ்.
அருமை ஐயா! என்னுளும் நிறைய கேள்விகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன ......சண்முகம்
ReplyDelete