வாசிப்பு!!!
சிறிது காலத்திற்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அந்த கடிதம் இப்படி முடியும். "எல்லாரும் இலக்கியம், இலக்கியம்னு சொல்றாங்களே. அப்படி என்றால் என்ன?". அந்த கடிதத்தின் மொத்த சாராம்சமும் கூட அந்த கடைசி வரிதான்.
ஜெயமோகனின் "விசும்பு", "அனுபவக் கதைகள்" ஆகிய இரு புத்தகங்களை படித்து முடித்தவுடன், தோன்றிய உணர்ச்சியின் (உண்மையாக சொல்வதானால் தோன்றாத உணர்ச்சியின்) விளைவுதான் அந்த கடிதம். ஜெயமோகன் அவருடைய இணையதளத்தில் 'இலக்கியக் கதைகள்' என்பது வாசிப்பவருக்கு ஒரு பரவச உணர்ச்சியை அளிக்கிறது, கற்பனையை தூண்டுகிறது, என்றெல்லாம் எழுதி இருந்தார். எனக்கு அந்த கதைகளை வாசித்த பிறகு அப்படி எந்த உணர்வும் ஏற்படவில்லை. நேர்மையாக சொல்வதானால் எனக்கு அவைகள் நான் அவ்வப்போது படித்து வந்த வார இதழ் (குறிப்பாக ஆனந்த விகடன்) கதைகளை போல மட்டும்தான் எனக்கு தோன்றியது. எனக்குத்தான் யோசிக்கும் பழக்கம் குறைவு ஆயிற்றே! ஆகவே அவரிடமே கேட்டு விடுவது என்ற முடிவில் அந்த கடிதம் அனுப்பி இருந்தேன். ஏன் எனக்கு அந்த மாதிரி உணர்ச்சி பெருக்குகள் எதுவுமே ஏற்படவில்லை? நான் வாசிப்பதில் கோளாறா? இல்லை வாசிப்பது கோளாறா?. என்ற கேள்விகள் அந்த கடிதம் முழுவதும் வேறு வேறு தொனியில், வார்த்தைகளில் கேட்டிருந்தேன்.
அவர் முழுக் கடிதத்தையும் படித்து விட்டு, தெளிவாகவே பதில் அனுப்பி இருந்தார். அவர் நிறைய எழுதியிருந்தாலும், அதன் சாராம்சம் இதுதான். "நீ இன்னும் வளரனும், தம்பி!!".
வேடிக்கையாக தெரிந்தாலும் அவர் மிகத்தெளிவாகவே அதை சொல்லி இருந்தார். மேலும் அவர் எனக்கு உதவகூடும் என்று குறிப்பிட்டு இருந்த புத்தகம் 'நவீன இலக்கியம் -- ஓர் அறிமுகம்'. அவருடைய புத்தகம். என்னிடம் அந்த புத்தகம் ஏற்கனவே இருந்தது. அதற்கு ஒரு சிறிய 'மின்னும் பின்புறம்' (அட! பிளாஷ்பேக் தாங்க!)
சக்கரவர்த்தி என்ற என் நண்பனின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவனே சமைத்து கொண்டிருந்தான். மனைவி பிரசவத்திற்கு சென்றிருந்தாள். நான் அவன் சமைப்பதை பார்த்தால் ஒரு வேலை சாப்பிட முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் உள்ளேயும் வெளியேயும் சுற்றி கொண்டிருந்தேன். அவன் ஒரு குட்டி நூலகமே வீட்டில் வைத்திருந்தான். பெருமிதமாக இருந்தது. பெரும்பான்மையான புத்தகங்கள் ஆன்மீகம் தொடர்பானது. அவைகளை அவன் முன் படித்து (என் நாவை கட்டுப்படுத்த முடியாமல்) நான் சொல்லும் விசயங்களை கேட்டு ஒருவேளை உணவு இல்லை என்று சொல்லிவிட்டால்... ஆகவே ஒரு உயரிய நோக்கத்தோடு வேறு புத்தகம் எதுவும் கண்களில் தென்படுகிறதா என்று தேடினேன். அப்போது என் கண்களில் அகப்பட்டதுதான் இந்த புத்தகம். தலைப்பையும், ஜெயமோகனின் பெயரும் மட்டுமே போதுமானதாக இருந்தது என்னை ஈர்க்க. அவனிடம் இருந்து அந்த புத்தகத்தை இரவல் வாங்கி கொண்டு வந்தேன். கண்டிப்பாக திருப்பி கொடுப்பதாக கூறியிருக்கிறேன். எப்போது என்று கூற மறந்து விட்டேன்..வழக்கம்போல. வாங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. அநேகமாக, அவன் நல்லவனாக இருக்கும்வரை அந்த புத்தகம் என்னிடம்தான் இருக்கும் போல தெரிகிறது. (தயவுசெய்து இதை படிப்பவர்களில் அவனுக்கு தெரிந்தவர்கள் இருந்தால்..அவனிடம் சொல்லிவிடவும். குறிப்பாக 'அவன் நல்லவனாக இருக்கும்வரை அந்த புத்தகம் என்னிடம் இரு
க்கும்' என்பதை..).
ஏதேதோ சொல்லி கொண்டிருக்கிறேன். இந்த கட்டுரையானது.. அந்த புத்தகம் , அதன் மூலம் என் வாசிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் (முழுமை அல்ல! ஒரு சிறு மாற்றம்தான்), என்னுடைய நிகழ்கால வாசிப்பு (சுஜாதாவும், எஸ். ராமகிருஷ்ணனும்) இவைகளை பற்றியான ஒரு குழப்பநிலை என்றே கூறலாம். என்னுடைய இந்த தளத்தை வாசிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் தெளிவாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று தெரிந்திருந்தும்...ஒரு சிறு தகவில்(Probability) குழப்பம் இல்லாதவர் என் தளத்தில் நுழைந்து விட்டால்?..ஆகவே அந்த ஊடுருவல் நிகழாமல் தடுக்கவே இந்த பதிவு. இதை படித்த பிறகும் யாருக்காவது 'ஒண்ணும் குழப்பம் இல்லையே' என்று தோன்றினால் அவர் பெயர் மன்மோகன் சிங்கா? என்று ஒரு முறை சோதித்துக் கொள்ளவும்!!
குழப்பம் இல்லாமலிருந்து உங்கள் பெயர் மன்மோகனாகவும் இல்லாமலிருந்தால் தயவு செய்து தாமதிக்காமல் உடனே காங்கிரஸில் இணைந்து விடவும். உங்களுக்கான கதவுகள் அங்கே காத்திருக்கின்றன!!
அடுத்த முறை சந்திப்போம்!!
(இன்னும் நீடிக்கும்!!)


காளி, உங்கள் பதிவை http://tamilmanam.net/, http://ta.indli.com/ போன்ற திரட்டிகளில் இணையுங்கள். இன்னும் நிறைய ஒத்த கருத்துடையவர்களுக்கு சென்று சேர்க்கும்.
ReplyDeleteநன்றி பாலா! செய்கிறேன் (ஒரு விளம்பரம்...:)..)
ReplyDeleteThambi cine field pathiyum elutha arambi..By Mani
ReplyDelete